சுஷாந்த் சிங் மரணத்தை வைத்து மகாராஷ்டிரா-பீகார் இடையே மோதலை தூண்ட வேண்டாம்...முதல்வர் உத்தவ் தாக்கரே கருத்து..!!

தினகரன்  தினகரன்
சுஷாந்த் சிங் மரணத்தை வைத்து மகாராஷ்டிராபீகார் இடையே மோதலை தூண்ட வேண்டாம்...முதல்வர் உத்தவ் தாக்கரே கருத்து..!!

புனே: நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை வைத்து மகாராஷ்டிரா மற்றும் பீகார் இடையே மோதலை உருவாக்க வேண்டாம் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கேட்டுக் கொண்டுள்ளார். மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மராட்டிய காவல்துறையை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார். சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை நிச்சயம் தண்டிக்க நடவடிக்கை எடுப்போம் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதனிடையே சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள அவரது காதலி ரியா உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார். அதில் கடவுள் மீதும், நீதித்துறை மீதும் நம்பிக்கை வைத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் தனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னை பற்றி ஊடகத்தில் மோசமான செய்திகள் வருகின்றன. இது பற்றி பதில் அளிக்க விரும்பவில்லை.பிரச்சனை நீதிமன்றத்தில் இருப்பதே காரணமாகும் என குறிப்பிட்டுள்ளார். சுஷாந்த் சிங் தற்கொலை செய்துக்கொள்ள வாய்ப்பே இல்லை என்று அவரது முன்னாள் காதலி அங்கிதா கூறியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த அவர், சுஷாந்த் சிங் உடன் 7 ஆண்டுகள் பழக்கத்தில் இருந்ததால் சுஷாந்த் சிங் குணாதிசயங்கள் தமக்கு தெரியும் என்று கூறியுள்ளார். குறிக்கோள்களை டைரியில் எழுதி வைத்து சாதிக்க நினைக்கும் சுஷாந்த் சிங், அனைத்து சூழலுக்கும் ஒத்துப்போகும் குணமுடையவர் என்று அங்கிதா தெரிவித்துள்ளார். இப்பிரச்சனையில் பாட்னா போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி நடிகை ரியா தாக்கல் செய்துள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சுஷாந்த் சிங் தந்தை, பீகார் அரசு மற்றும் மராட்டிய அரசு சார்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மும்பை தரப்பையும் கேட்காமல் நீதிமன்றம் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்பது கேவியட் மனுவின் சாரம்சமாகும். இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை வைத்து மராட்டியம் மற்றும் பீகார் இடையே மோதலை உருவாக்க வேண்டாம் என்று மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.

மூலக்கதை