போதைக்காக புதிய போதை வஸ்துக்களை நாடும் குடிகாரர்கள்: பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 41 பேர் பலி..!!

தினகரன்  தினகரன்
போதைக்காக புதிய போதை வஸ்துக்களை நாடும் குடிகாரர்கள்: பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 41 பேர் பலி..!!

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நிலை பாதித்து 41 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமிர்தசரஸ், பட்டாலா, டார்ன் டாரன் மாவட்டங்களில் கடந்த ஜூலை 29-ம் தேதி (புதன்கிழமை) அன்று கள்ளச்சாராய விற்பனை பரவலாக நடந்துள்ளது. இதில் முட்சல், டாங்கறா கிராமங்களை சேர்ந்த பலர் மயங்கி விழுந்து இறந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 3 நாட்களில் பல கிராமங்களை சேர்ந்த 41 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மாநில முதலமைச்சர் அம்ரேந்தர் சிங் கூறியுள்ளார். சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைதான 8 பேரில் ஒருவர் பெண் என்றும், அவரது கணவரும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் முழுவதும், தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் சாராயம் காய்ச்சி வைக்கப்பட்டிருந்த ஊரல்களை போலீசார் அழித்தனர். கொரோனா லாக்டவுன் காரணமாக பல்வேறு மாநிலங்களில், நகரங்களில் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. சென்னையில் மூடப்பட்ட டாஸ்மாக் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் மது கிடைக்காத குடிகாரர்கள், கள்ள சாராயம் காய்ச்சுவது, போதைக்காக புதிய போதை வஸ்துக்களை நாடுவது என்று நிறைய சம்பவங்கள் நடக்கிறது. இப்படி கள்ள சாராயம் காரணமாக, ஆங்காங்கே மக்கள் பலியாவதும் தொடர் கதையாகி உள்ளது.

மூலக்கதை