சீன ஆராய்ச்சியாளர் கைது

தினமலர்  தினமலர்
சீன ஆராய்ச்சியாளர் கைது

சான் பிரான்சிஸ்கோ : அமெரிக்காவில், சீன ராணுவத்துடன் தொடர்பில் இருந்ததை மறைத்து, 'விசா' பெற்றதாக கூறி, சீன ஆராய்ச்சியாளர் ஒருவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்த ஜுவான் டாங், 37, என்ற சீன ஆராய்ச்சியாளர் உட்பட, நான்கு ஆராய்ச்சியாளர்கள், விசா முறைகேடு செய்துள்ளது தெரிய வந்தது.அவர்கள், சீன ராணுவத்தில் அங்கம் வகித்ததை மறைத்து, விசா பெற்றுள்ளதாக, அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், டாங்கை தவிர, மற்ற மூவரை போலீசார் கைது செய்தனர். டாங், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சீன துாதரகத்தில், தஞ்சமடைந்தார். அங்கு, உடல்நலம் பாதிக்கப்பட்ட டாங், மருத்துவ உதவி தேவைப்படவே, துாதரகத்தில் இருந்து வெளியே வந்தார்.

இதையடுத்து, 23ம் தேதி, போலீசார் அவரை கைது செய்தனர்.இந்நிலையில், ஜாமின் வழங்கக் கோரி, டாங் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவரது வழக்கறிஞர் அலெக்சாண்ட்ரா நெஜின் கூறியதாவது:ஜூன், 20ம் தேதி, டாங் குடியிருப்பிற்கு வந்த அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள், அவரிடம் கேள்விகளை கேட்டு துன்புறுத்தினர். மேலும் அவரது, 'பாஸ்போர்ட்' மற்றும் விசாவை பறிமுதல் செய்தனர். இதனால் அச்சமடைந்த டாங், சீன துாதரகத்திடம் உதவி கோரி, அங்கேயே சில நாட்கள் தங்கினார்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ள டாங், சிகிச்சைக்காக, துாதரகத்தில் இருந்து, மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, போலீசார் அவரை கைது செய்தனர். கைதாகும் வரை, தம் மீதான வழக்கு குறித்து, அவருக்கு தெரியாது. அவர் ராணுவத்தில் பணியாற்றியவர் என கூறுவது, உண்மையல்ல. டாங், இந்த சமூகத்திற்கு ஆபத்தானவர் அல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை