வண்ண தொலைக்காட்சி பெட்டி இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு

தினமலர்  தினமலர்
வண்ண தொலைக்காட்சி பெட்டி இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு

புதுடில்லி:வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் இறக்குமதியில், கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு, மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம், இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இந்த அறிவிப்பில், வண்ண தொலைக்காட்சி பெட்டிகளின் இறக்குமதி கொள்கை, ‘சுதந்திரம்’ என்பதிலிருந்து, ‘கட்டுப்பாடுகள் கொண்டது’ என, திருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இறக்குமதிக்கான உரிமம் வழங்குவதற்கான நடைமுறை, பின்னர் தனியாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை வியட்நாம், சீனா ஆகிய நாடுகளிலிருந்து தான் அதிகளவில் தொலைக்காட்சி பெட்டிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. சீன முதலீடுகள் மற்றும் சீன செயலிகள் மீது, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, இப்போது வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் இறக்குமதிக்கும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசின் இந்த நடவடிக்கை குறித்து, ‘தைவா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான அர்ஜுன் பஜாஜ் கூறியதாவது:உள்நாட்டு தொலைக்காட்சி பெட்டிகள் தயாரிப்பை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்டிருக்கும் முதல் நல்ல நடவடிக்கை இது. வாடிக்கையாளர்கள், சீனாவிலிருந்து பெறும் தயாரிப்புகளை போல, உள்நாட்டு உற்பத்தியாளர்களின் தயாரிப்புகளை இனி பெறுவர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை