கொரோனா அச்சுறுத்தல் என தேர்தலை தள்ளிவைத்த ஹாங்காங் அரசு..!

தினமலர்  தினமலர்
கொரோனா அச்சுறுத்தல் என தேர்தலை தள்ளிவைத்த ஹாங்காங் அரசு..!

ஹாங்காங்: ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, வரும் செப்டம்பரில் நடைபெறவிருந்த சட்டசபை தேர்தலை ஓராண்டுக்கு தள்ளிவைப்பதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.


உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி சீனா அமல்படுத்திய தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக ஹாங்காங்கில் போராட்டம் நடந்து வருகிறது. ஹாங்காங்கில் சட்டங்களை இயற்றும் சட்டசபைக்கு செப்.6ம் தேதி தேர்தல் நடைபெறவிருந்தது. மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு, 35 பேர் மட்டுமே மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுவர். மீதமுள்ள 30 பேர் நியமனம் செய்யப்படுவர். இவர்கள் பெரும்பாலும் சீன ஆதரவு உறுப்பினர்களாகவே இருப்பர்.

ஹாங்காங்கின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில், பல்வேறு அடக்குமுறைகளை மேற்கொண்டு வரும் சீன ஆதரவு ஹாங்காங் அரசு, நேற்று முன் தினம் ஜனநாயகத்துக்கு குரல் கொடுத்து வரும், 12 பேரை தேர்தலில் போட்டியிட தடை விதித்தது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,ஹாங்காங் அரசின் தலைமை நிர்வாகி கேரி லாம் , தேர்தலை ஒத்திவைக்க அவசரகால அதிகாரங்களை கோருகிறேன். கடந்த ஏழு மாதங்களில் நான் எடுத்த மிக கடினமான முடிவு. இந்த தேர்தல் ஒத்திவைப்பு முழுக்க பொதுமக்களின் பாதுகாப்பு கருதியே எடுக்கப்பட்டது. அரசியல் நோக்கம் எதுவுமில்லை என தெரிவித்தார்.

லாம் மேலும் பேசுகையில், 'கடந்தாண்டு 18 மாவட்டங்களுக்கு நடந்த கவுன்சில் தேர்தலில் ஜனநாயக ஆதரவு வேட்பாளர்கள் 17 இடங்களில் வெற்றி பெற்றனர். கொரோனா தொற்றை காரணமாக பயன்படுத்தி, மக்கள் ஓட்டளிப்பதை தடுக்க ஹாங்காங் அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சீனா அமல்படுத்திய சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக மக்களிடையே கோபம் அதிகமாக காணப்படுகிறது.


இந்நிலையில், செப்டம்பரில் நடக்கும் தேர்தலில், பெரும்பான்மையை பெற்று ஆட்சியை கைப்பற்றுவோமென ஜனநாயகவாதிகள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.ஹாங்காங்கில் கடந்த 10 நாட்களாக நாளொன்றுக்கு புதிதாக 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. மூன்றாவது அலையாக அங்கு கொரோனா பாதிப்பை சந்தித்து வருகிறது. புதிய கொரோனா பாதிப்புகளால் ஹாங்காங் மருத்துவமனைகள் நிரம்பி வழியுமென அஞ்சுவதாக கேரி லாம் கூறினார்.
ஆனால் சமூக இடைவெளியை கட்டுப்பாடுகளை அமல்படுத்தினால் கொரோனா பாதிப்பு குறையுமெனவும், நான்கு அல்லது 6 வாரங்களுக்குள் கொரோனா பாதிப்பு பூஜ்யமாக குறையுமென நிபுணர்கள் கூறுகின்றனர்.

மூலக்கதை