ரத்தாகிறது டி.என்.பி.எல்., | ஜூலை 31, 2020

தினமலர்  தினமலர்
ரத்தாகிறது டி.என்.பி.எல்., | ஜூலை 31, 2020

சென்னை: டி.என்.பி.எல்., கிரிக்கெட் தொடரின் 5வது சீசன் ரத்தாகும் எனத் தெரிகிறது.

தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில் 2016ம் ஆண்டு முதல், தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) ‘டுவென்டி–20’ கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடக்க இருந்த 5வது சீசன் (ஜூன் 10 – ஜூலை 12) கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இத்தொடர், ஆகஸ்ட்–செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக., 31 வரை எவ்வித விளையாட்டு போட்டிகளையும் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. தவிர, செப்டம்பரில் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) 13வது ஐ.பி.எல்., தொடர் நடக்க உள்ளது. இதனால் அஷ்வின் (டில்லி), முரளி விஜய் (சென்னை), தினேஷ் கார்த்திக் (கோல்கட்டா), விஜய் சங்கர் (ஐதராபாத்) உள்ளிட்ட முன்னணி தமிழக வீரர்கள் ஐ.பி.எல்., விளையாட சென்றுவிடுவர். இதன்பின், ரஞ்சி கோப்பை நடக்கிறது. எனவே டி.என்.பி.எல்., தொடர் நடப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து டி.என்.சி.ஏ., அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஜூலை மாதத்திற்கு பின், ஊரடங்கு தளர்த்தப்பட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் டி.என்.பி.எல்., தொடரை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,’’ என்றார்.

மூலக்கதை