இந்திய அணியில் யாருமில்லை: என்ன சொல்கிறார் மாத்யூ வேட் | ஜூலை 31, 2020

தினமலர்  தினமலர்
இந்திய அணியில் யாருமில்லை: என்ன சொல்கிறார் மாத்யூ வேட் | ஜூலை 31, 2020

மெல்போர்ன்: ‘‘நியூசிலாந்தின் வாக்னர் போல துல்லியமாக ‘பவுன்சர்’ வீச, இந்திய அணியில் யாருமில்லை,’’ என, ஆஸ்திரேலியாவின் மாத்யூ வேட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா செல்கிறது. முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில், வரும் டிச. 3–7 ல் நடக்கிறது. அதன்பின் அடிலெய்டு (டிச. 11–15),மெல்போர்ன் (டிச. 26–30), சிட்னியில் (2021, ஜன. 3–7) நடக்கின்றன.

இதுகுறித்து ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மாத்யூ வேட் கூறியது: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இந்தியாவை வீழ்த்துவது கடினம். ஏனெனில் அது ஆக்ரோஷமான அணி. இந்திய அணி கேப்டன் கோஹ்லியின் செயல்பாடு, சகவீரர்களை ஊக்கப்படுத்துவதாக இருக்கும். எனவே இம்முறை இந்தியாவுக்கு எதிரான தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும்.

இந்திய அணியில் பும்ரா, ஷமி உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ஆனால் இவர்கள், நியூசிலாந்தின் நீல் வாக்னர் போல துல்லியமாக ‘பவுன்சர்’ வீசமாட்டார்கள். வாக்னர் பந்தில் ரன் எடுப்பது மிகவும் கடினம். இவரை போல துல்லியமாக ‘பவுன்சர்’ வீசும் பவுலர் யாருமில்லை.

இவ்வாறு மாத்யூ வேட் கூறினார்.

மூலக்கதை