ராகுலை தலைவராக்குங்க:சோனியாவிடம் காங்.,இளம் எம்.பி.,க்கள் கொந்தளிப்பு

தினமலர்  தினமலர்
ராகுலை தலைவராக்குங்க:சோனியாவிடம் காங்.,இளம் எம்.பி.,க்கள் கொந்தளிப்பு

'கட்சியின் சரிவுக்கு ஒட்டுமொத்த காரணமே, ஐ.மு., கூட்டணி அரசில் அதிகாரத்தை சுவைத்த முதியவர்கள் தான். அவர்களை விலக்கி வைக்கும் நேரம் வந்துவிட்டது. ராகுலை மீண்டும் கட்சி தலைவராக்குவதே, ஒரே தீர்வு' என, காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம், இளம் எம்.பி.,க்கள் கொதித்தெழுந்ததால், பரபரப்பு நிலவுகிறது.

டில்லியில், சோனியா தலைமையில், ராஜ்யசபா காங்கிரஸ், எம்.பி.,க் களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பொதுவான அரசியல் நிலவரங்கள் பற்றிய ஆலோசனை எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், கூட்டம் துவங்கிய சில நிமிடங்களிலேயே, 'தலைமுறை இடைவெளி' மோதல்கள் வெடித்தன.

பெரும் சர்ச்சை:

முன்னாள் அமைச்சர் கபில் சிபல் உட்பட, சில சீனியர் தலைவர்கள் பேசியதாவது:பொருளாதார மந்தநிலை, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், சீன விவகாரம் என, பல விவகாரங்களில், மத்திய அரசு பெரும் சறுக்கலை சந்தித்தும்கூட, அதை பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் தவறிவிட்டது. பிரதமர் மோடிக்கான ஆதரவு தளத்தை, சரிவடையச் செய்ய, தற்போதைய பலவீனமான கட்டமைப்பு போதாது. கட்சிக்குள் நிறைய ஆலோசனைகள், விவாதங்கள் நடைபெற வேண்டும். சுயபரிசோதனை மிக மிக அவசியம். இவ்வாறு, அவர்கள் பேசினர்.

இந்த பேச்சைக் கேட்டு, ராகுல் ஆதரவு இளம், எம்.பி.,க்கள் பலர், கொந்தளித்துவிட்டனர். அவர்களில், ராகுல் ஆதரவாள ரான, ராஜிவ் சத்தவ், எம்.பி., பேசியதாவது: நீங்கள் கூறியதெல்லாம் நல்ல யோசனை தான். ஆனால், 2009ல், 200க்கும் அதிகமாக, எம்.பி.,க்களை கொண்டிருந்த நாம், வெறும், 44 எம்.பி.,க்களாக சுருங்கியதற்கு காரணம் என்ன? ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது அதிகாரத்தை சுவைத்த உங்களைப் போன்ற மூத்தவர்கள் தான், பதில் சொல்ல வேண்டும்.

அமைச்சர் பதவிகள் போனதும், மக்களிடம் கட்சியை எடுத்து செல்ல முயற்சி செய்தவர்கள், உங்களில் யார் யார்... நீங்கள் தினமும், கட்சி நிர்வாகிகள் எத்தனை பேரை சந்திக்கிறீர்கள்... கட்சிக்கான பங்களிப்பு என்பது, அதிகாரத்தில் இருப்பது மட்டும் தானா... தேர்தலில் ஏன் தோற்றோம்; எங்கு தவறு நடந்தது என்பதையெல்லாம், ஆட்சி செய்த நீங்கள் தான் விரிவாக ஆராய முடியும். ஆனால், இதையெல்லாம் செய்யாத, உங்களைப் போன்ற மூத்தவர்களுக்குத் தான், சுயபரிசோதனை அவசியம். இவ்வாறு, அவர் பேசினார்.

இதே பாணியில், இளம் எம்.பி.,க்கள் பலரும் பேசியபடி இருக்க, மூத்த எம்.பி.,க்கள் சிலர், ராகுலை குத்திக் காட்டும் விதமாக பேசத் துவங்கினர். ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட் இருவரைப் பற்றியும் குறிப்பிட்டு, கட்சிக்கு துரோகம் செய்தவர்களை யார் வளர்த்துவிட்டது என, கேள்வி எழுப்பினர்.

'சீனியாரிட்டிக்கு மதிப்பு தராமல், பழகியவன், பள்ளித்தோழன் என்றெல்லாம், கண்டவர்களையும் கட்சிக்குள் கொண்டு வந்து, முக்கியத்துவம் தந்ததன் விளைவைத் தான், ம.பி.,யிலும், ராஜஸ்தானிலும் பார்க்கிறோமே' என, மூத்த எம்.பி., ஒருவர் கூற, பெரும் சர்ச்சை வெடித்தது.

இதில் குறுக்கிட்ட, கே.சி.வேணுகோபால், ''பெட்ரோல், டீசல் விலை உயர்வு புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்னை உள்ளிட்ட சம்பவங்களில், மத்திய அரசை எதிர்த்து, கட்சி சார்பில், டிஜிட்டல் முறையில், பல்வேறு பேரணிகள், பேட்டிகள், போராட்டங்களை நடத்தினோம்,'' என, பட்டியலிட்டார்.

பரபரப்பு:

இவரையடுத்து சில இளம் எம்.பி.,க்கள் பேசியதாவது: தலைவர்களை டில்லியிலிருந்து திணிக்க வேண்டாம். களத்தில் நிற்பவர்களுக்கு, அங்கீகாரம் தாருங்கள். மத்திய அரசை எதிர்த்து நிற்க வேண்டுமெனில், தெளிவான, துடிப்புள்ள தலைமை தேவை. அத்தகைய தலைமை இல்லாமல், போராட்டங்கள், விமர்சனங்கள், 'டுவிட்'டுகள், பேட்டிகள் என, எதை செய்தாலும், வீண் தான். எனவே, ராகுலை தலைவராக்குவது தான் ஒரே தீர்வு. இவ்வாறு, அவர்கள் வாதிட்டனர். இந்த மோதலையடுத்து, ஒட்டுமொத்த ஆலோசனையும் பரபரப்பாகவே இருந்தது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மவுனம்:

மொத்தம், நான்கு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையில், ஐ.மு., கூட்டணி அரசை, காங்., - எம்.பி.,க்களே கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா என, தன் அமைச்சரவை சகாக்களுடன், பங்கேற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஒருவார்த்தை கூட பேசாமல், அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தார்.

மோதல் முடிந்ததும் மருத்துவமனை:

ஏற்கனவே, ஜூலை முதல் வாரத்தில், இதேபோல லோக்சபா, எம்.பி.,க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட போதும், ராகுலை தலைவராக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. மொத்தம், 37 எம்.பி.,க்கள் பங்கேற்ற இந்த கூட்டத்திலும், பெரும்பாலான இளம் எம்.பி.,க் கள், அதே கருத்தை வலியுறுத்தினர். இந்த கூட்டம் முடிந்த பின்பு தான், வழக்கமான உடற்பரிசோதனைக்காக, சோனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

- நமது டில்லி நிருபர் -

மூலக்கதை