ஆக. 14ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்; ரூ15 கோடிக்கு மேல் வரம்பின்றி செல்லும் குதிரை பேரம்: முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆக. 14ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்; ரூ15 கோடிக்கு மேல் வரம்பின்றி செல்லும் குதிரை பேரம்: முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு

ஜெய்ப்பூர்: ஆக. 14ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம் நடக்கவுள்ளதால் எம்எல்ஏக்களை இழுக்க குதிரை பேரம் வரம்பின்றி செல்வதாக முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. கட்சிக் கொறடா உத்தரவை மீறிய சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களுக்கு எதிராக தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதற்கு எதிரான வழக்கில், 19 எம்எல்ஏக்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கிடையே, சட்டப்பேரவையில் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் ஆர்வம் காட்டி வருவதால், சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை 3 முறை சந்தித்து வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில், ‘ராஜஸ்தான் சட்டப் பேரவையின் ஐந்தாவது அமர்வை ஆக. 14 முதல் கூட்டக் கோரும் அமைச்சரவை முடிவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.



அதனால், ஆக. 14ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டப்படும்’ என்று ஆளுநர் அலுவலக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ராஜஸ்தான் எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக மாநில உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஆக. 14ம் தேதி தொடங்கவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுநர் மாளிகையின் கூட்டத்தொடர் அறிவிப்புக்குப் பிறகு ராஜஸ்தானில் ‘குதிரை வர்த்தக பேரங்கள்’ அதிகரித்துள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், குதிரை வர்த்தக பேரங்கள் அதிகரித்துள்ளன.

ஏற்கனவே தலா ஒரு எம்எல்ஏவின் விலை முதலில் ரூ. 10 கோடியாகவும், இரண்டாவதாக ரூ. 15 கோடியாகவும் உயர்ந்தது. ஆனால், இப்போது அது வரம்பற்றதாகிவிட்டது.



குதிரை வர்த்தகம் யார் செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்’ என்று தெரிவித்துள்ளார். மற்றொரு டுவிட்டில், ‘இந்த முழு ஆட்டமும் முடிந்துவிடும்.

குதிரை பேரத்தை பாஜகவால் மட்டுமே செய்ய முடியும். எங்கள் கட்சியின் சில தலைவர்களும் பாஜகவுக்காக வேலை செய்கிறார்கள்.

எவ்வாறாயினும், சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கான கோரிக்கையை ஆளுநர் ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். குதிரை வர்த்தகம் நடப்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. நாங்கள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.


.

மூலக்கதை