தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது குவியும் புகார்கள்: ஏடிஎஸ்பி விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது குவியும் புகார்கள்: ஏடிஎஸ்பி விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது புகார்கள் குவிந்து வருகிறது. இது தொடர்பாக ஏடிஎஸ்பி விசாரணை நடத்தினார்.

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்டது தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐகள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை மற்றும் போலீசார் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சாத்தான்குளத்தை சேர்ந்த அழகுஜார்ஜ் என்பவரையும் தாக்கி சித்ரவதை செய்ததாக சாத்தான்குளம் எஸ்ஐகள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை சம்பவத்திற்கு முன்னரே பேய்க்குளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவரை சாத்தான்குளம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கியதில் அவர் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.



இந்த சம்பவத்தில் அவரது தாய் வடிவு மதுரை ஐகோர்ட் கிளையில் தொடுத்த வழக்கின் அடிப்படையில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு டிஎஸ்பி அணில்குமார் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே சாத்தான்குளத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ ரகுகணேஷ் மீது மேலும் இருவர் கடந்த 28ம் தேதி எஸ்பியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

சாத்தான்குளம் அருகேயுள்ள ஆசீர்வாதபுரத்தை சேர்ந்த யாக்கோபுராஜ் என்பவர் அளித்த புகார்: நான் பனையேறும் தொழில் செய்து வருகிறேன். கடந்த 23. 5. 2020 அன்று மாலை 7 மணியளவில் மீரான்குளம் பஸ் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தேன்.

அப்போது அங்கு வந்த எஸ்ஐ ரகுகணேஷ் என்னை வலுக்கட்டயமாக காரில் ஏற்றி பழனியப்பபுரம் காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு அவருடன் இருந்த 5 பேர் என்னை சரமாரியாக தாக்கினர்.

பின்னர் 10 மணியளவில் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் முன்னிலையில் மீண்டும் என்னை தாக்கினர்.



பின்னர் என்மீது பொய்வழக்கு பதிவு செய்து கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். என்மீது புகார் கொடுத்த மகேந்திரன் என்பவர் யார் என்றே எனக்கு தெரியாது.

என்னை தங்களது சுயலாபத்திற்காக தாக்கி, பொய் வழக்குபதிவு செய்த இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மற்றும் 5 பேர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இதற்கிடையே போலீசார் தாக்கியதில் இறந்ததாக கூறப்படும் மகேந்திரனுடன் சம்பவ நேரத்தில் காவல் நிலையத்தில் இருந்த அவரது மாமா தங்கவேல் என்பவர் எஸ்பி ஜெயக்குமாரிடம் புகார் அளித்துள்ளார்.

அதில் கடந்த 23. 05. 2020ல் அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த என்னை சாத்தான்குளம் எஸ்ஐ ரகு கணேஷ் மற்றும் சில நபர்கள் என் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்து என்னை தாக்கி தூக்கிச் சென்றனர். அப்போது காருக்குள் எனது மருமகன் மகேந்திரனும் இருந்தார்.

அடுத்த நாள் இரவு முழுவதும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்தோம். அங்கு மகேந்திரன் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டனர்.



என் அருகே மீரான்குளம் யாக்கோபுராஜ் என்பவர் போலீசார் தாக்கியதில் சுயநினைவு இன்றி கிடந்தார். எங்களிடம் வெள்ளை தாளில் கையெழுத்து வாங்கிக்கொண்டு மறுநாள் இரவு 10. 30 மணிக்கு என்னையும் மகேந்திரனையும் விடுவித்தனர். இந்நிலையில் எங்களிடம் கையெழுத்து பெற்றுக்கொண்ட வெள்ளை தாள் மூலம் எங்களிடம் யாக்கோபுராஜ் பணம் கேட்டு மிரட்டியதாக போலி புகார் தயார் செய்து, நாங்கள் முன் பின் பார்த்திராத யாக்கோபுராஜ் மீது எஸ்ஐ ரகுகணேஷ் பொய்வழக்கு பதிவு செய்துள்ளார்.

இந்த விபரம் தற்போது தான் எங்களுக்கு தெரிய வந்துள்ளது. எனவே இதுகுறித்து போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

எஸ்பி ஜெயக்குமார் இந்த புகார் குறித்து விசாரணை நடத்த ஏடிஎஸ்பி கோபிக்கு உத்தரவிட்டார். இது தொடர்பான விசாரணைக்கு யாக்கோபுராஜ் உள்ளிட்டவர்கள் தூத்துக்குடி எஸ்பி அலுவலகம் வந்திருந்தனர்.

அவர்களிடம் ஏடிஎஸ்பி விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து சாத்தான்குளம் போலீசார் மீது அடுக்கடுக்காக குவியும் புகார்களால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை