தங்கத்தின் தேவை சரிகிறது உலக தங்க கவுன்சில் அறிக்கை

தினமலர்  தினமலர்
தங்கத்தின் தேவை சரிகிறது உலக தங்க கவுன்சில் அறிக்கை

மும்பை:நாட்டின் தங்கத்தின் தேவை, கடந்த ஏப்ரல் முதல், ஜூன் வரையிலான காலாண்டில், 70 சதவீதம் அளவுக்கு சரிந்து, 63.7 டன் ஆக குறைந்து விட்டதாக, உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் மற்றும் தங்கத்தின் விலை அதிகரிப்பு ஆகிய காரணங்களால், தேவை குறைந்து விட்டதாகவும் கவுன்சில் தெரிவித்துள்ளது.இது குறித்து மேலும் அறிவிக்கப்பட்டு உள்ளதாவது:கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில், நாட்டின் தங்கத்தின் தேவை, 213.2 டன் ஆக இருந்த நிலையில், நடப்பாண்டில், 63.7 டன் ஆக குறைந்து விட்டது. மதிப்பின் அடிப்படையில் பார்த்தால், கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில், 62 ஆயிரத்து, 420 கோடி ரூபாயாக இருந்தது, நடப்பு ஆண்டு காலாண்டில், 26 ஆயிரத்து, 600 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, 57 சதவீத சரிவாகும்.

ஆபரணங்களுக்கான தேவையை பொறுத்தவரை, ஜூன் காலாண்டில், 74 சதவீதம் குறைந்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில் ஆபரணங்கள் தேவை, 44 டன் ஆகவும்; இதுவே, கடந்த ஆண்டு இதே காலத்தில், 168.6 டன் ஆகவும் இருந்தது.மொத்த முதலீட்டுத் தேவை, ஜூன் காலாண்டில், 56 சதவீதம் குறைந்து, 19.8 டன் ஆகவும்; இதுவே, கடந்த ஆண்டில் இதே காலாண்டில், 44.5 டன் ஆகவும் இருந்தது.மதிப்பின் அடிப்படையில் முதலீட்டு தேவை, 37 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

மதிப்பீட்டின் அடிப்படையில் பார்த்தால், கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில், 13 ஆயிரத்து, 40 கோடி ரூபாய் என்று இருந்த நிலையில், நடப்பு ஆண்டில், 8,250 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.மறுசுழற்சி செய்யப்படும் தங்கமும், மதிப்பீட்டுக் காலாண்டில், 64 சதவீதம் அளவுக்கு சரிந்து உள்ளது.நாட்டின் மொத்த தங்க இறக்குமதி, நடப்பு ஆண்டின் ஜூன் காலாண்டில், 95 சதவீதம் குறைந்து, 11.6 டன் ஆக உள்ளது. இதுவே கடந்த ஆண்டின் இதே காலத்தில், மொத்தம், 247.4 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் 6 மாதங்களில்நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில், தங்கத்தின் தேவை, 56 சதவீதம் குறைந்து, 165.6 டன் ஆக உள்ளது. அடுத்து வரும் அரையாண்டில் தொற்று நோய் தாக்கம், பொருளாதார மீட்சி ஆகியவற்றை பொறுத்து, தேவை அதிகரிக்க கூடும்.

மூலக்கதை