வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் 5வது இடத்தை பிடிக்க வாய்ப்பு

தினமலர்  தினமலர்
வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் 5வது இடத்தை பிடிக்க வாய்ப்பு

மும்பை:வேளாண் பொருட்களை அதிகளவு ஏற்றுமதி செய்யும் நாடுகளில், ஐந்தாவது இடத்தை இந்தியா பிடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, உலக வர்த்தக அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

விவசாயிகளை திறம்பட கையாளுவதன் மூலமும், சாகுபடி மீதான அதன் கவனத்தை மாற்றுவதன் மூலமும், வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில், ஐந்தாவது இடத்தை இந்தியா கைப்பற்ற முடியும் என, அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

மத்திய அரசு, வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், உலக வர்த்தக அமைப்பின் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், திறனை வளர்ப்பது குறித்து கவனம் செலுத்துவதன் மூலம், தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளை விஞ்சும் வகையில், வேளாண் ஏற்றுமதியை மேம்படுத்தி, உலகின் ஐந்தாவது பெரிய ஏற்றுமதி நாடாக மாற முடியும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

பூச்சிக்கொல்லி மருந்துகளை, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பயன்படுத்துவதன் காரணமாக, பல தடவை, இந்திய ஏற்றுமதிப் பொருட்கள் நிராகரிக்கப்பட்டு விடுகின்றன. எனவே, விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயனங்களை பயன்படுத்துவது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் உலக தரத்துக்கு சமமாக, வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்ய இயலும் என்றும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளின் அளவை விட, தரத்தை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தி, உலக சந்தைகளுக்கு தரமான பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, இது தான் சமயம் என்று, அறிக்கை மேலும் கூறியுள்ளது.பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில், உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக இந்தியா இருப்பினும், உலக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு, 1.8 சதவீதம் என்ற அளவுக்கே இருக்கிறது என்ற ஆதங்கத்தையும், ஆய்வறிக்கை வெளிப்படுத்தி உள்ளது.

உலக நாடுகள் ஏற்றுமதி(2019ம் ஆண்டு நிலவரம்)நாடு ஏற்றுமதி மதிப்பு (ரூபாய் லட்சம் கோடிகளில்)

ஐரோப்பிய யூனியன் 13.67

அமெரிக்கா 12.99

பிரேசில் 7.02

சீனா 6.27

கனடா 5.21

இந்தோனேஷியா 3.47

தாய்லாந்து 3.32

இந்தியா 2.94

மூலக்கதை