இந்திய வீரர்கள் பயிற்சி எப்போது | ஜூலை 30, 2020

தினமலர்  தினமலர்
இந்திய வீரர்கள் பயிற்சி எப்போது | ஜூலை 30, 2020

மும்பை: ஐ.பி.எல்., தொடருக்கு முன் இந்திய அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் நடக்காது எனத் தெரிகிறது.

கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 13வது ஐ.பி.எல்., தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சில் வரும் செப்., 19ல் துவங்க உள்ளது. இதற்கு முன் இந்திய வீரர்களை ஒருங்கிணைத்து ஆமதாபாத் மைதானத்தில் ஆக. 18 முதல் செப். 4 வரை பயிற்சி முகாம் நடத்த இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) திட்டமிட்டு இருந்தது.

இதுகுறித்து குஜராத் கிரிக்கெட் சங்கம் (ஜி.சி.ஏ.,) வெளியிட்ட அறிக்கையில்,‘ஆமதாபாத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கும் என ‘மீடியா’ தான் தெரிவித்தது. இதுகுறித்து பி.சி.சி.ஐ.,யிடம் இருந்து எங்களுக்கு எவ்வித தகவலும் வரவில்லை,’ என தெரிவித்தது.

இதனால் கொரோனா காரணமாக பயிற்சி முகாம் ரத்து செய்யப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் நேரடியாக துபாய் சென்று, தங்கள் அணியுடன் இணைந்து கொள்வர் என நம்பப்படுகிறது.

பைனல் மாற்றம்

இதனிடையே ஐ.பி.எல்., தொடரின் பைனல் நவ. 8 ல் நடக்கும் என கூறப்பட்டது. தீபாவளி (நவ. 14) வாரத்தில் பைனல் நடந்தால் நல்லது என அணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் நவ. 10ல் பைனல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஐ.பி.எல்., கட்டுப்பாட்டுக் குழு கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும். ஒருவேளை அனுமதி தரப்படும் பட்சத்தில் முதன் முறையாக ஞாயிறு அல்லாத தினத்தில் பைனல் (செவ்வாய்) நடக்கும். இத்தொடருக்குப் பின் யு.ஏ.இ.,யில் இருந்தபடி இந்திய அணி, டெஸ்ட் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா கிளம்பிச் செல்லும்.

மூலக்கதை