பெண் சகவாசத்தால் ஏற்பட்ட நம்பிக்கை துரோகம்: சப்பாத்தியில் விஷம் வைத்து நீதிபதி, மகன் கொலை: மந்திரவாதி உட்பட 6 பேர் கும்பல் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெண் சகவாசத்தால் ஏற்பட்ட நம்பிக்கை துரோகம்: சப்பாத்தியில் விஷம் வைத்து நீதிபதி, மகன் கொலை: மந்திரவாதி உட்பட 6 பேர் கும்பல் கைது

போபால்: மத்திய பிரதேசத்தில் பெண் சகவாசத்தால் ஏற்பட்ட நம்பிக்கை துரோகத்தால் நீதிபதி, அவரது மகன் ஆகியோர் சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படி சப்பாத்தியில் விஷம் வைத்து கொல்லப்பட்டனர். இந்த கொலையை செய்த மந்திரவாதி, பெண் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்தியபிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி மகேந்திர குமார் திரிபாதி (56) மற்றும் அவரது மகன் அபியான்ராஜ் திரிபாதி (33) ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் உணவு ஒவ்வாமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து 5 நாட்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் நீதிபதியும், அவரது மகனும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மருத்துவக் குழு மற்றும் போலீசாரின் விசாரணையில், நீதிபதி மற்றும் அவரது மகன் ஆகியோர் சாப்பிட்ட சப்பாத்தியில் விஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

இவ்விவகாரம் தொடர்பாக பெண் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், ‘கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, மற்றும் அவரது மகனின் மரணங்கள் தொடர்பாக ஒரு பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



சிந்த்வாரா மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் சந்தியா சிங் (45) என்ற பெண், ‘குடும்பத்தில் நல்லிணக்கம்’ ஏற்படுவதற்காக விஷம் கலந்த கோதுமை மாவை நீதிபதியின் குடும்பத்திற்கு வழங்கி உள்ளார். சம்பவம் நடந்த 20ம் தேதி, நீதிபதியின் வீட்டிற்கு கோதுமை மாவை அந்த பெண் கொண்டு வந்துள்ளார்.

அதேநாளில் நீதிபதியின் மனைவி அதை சமைத்துள்ளார். அன்று இரவு விஷ சப்பாத்தியை சாப்பிட்டு நீதிபதியும் அவரது இரண்டு மகன்களும் வாந்தியெடுக்கத் தொடங்கினர்.

தொடர் சிகிச்சைக்கு பின், 25ம் தேதி நீதிபதி மற்றும் அவரது மூத்த மகன் இறந்தனர். நீதிபதியின் இளைய மகன் ஆஷிஷ் தொடர் சிகிச்சையில் உள்ளார்.

கைதான சந்தியா சிங்கிடம் விசாரணை நடத்திய போது, நீதிபதி சிந்த்வாராவில் பணியாற்றிய போது அவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி உள்ளனர்.



ஆனால், பெதுல் மாவட்டத்துக்கு நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்ட பின், கடந்த 4 மாதங்களாக அந்த பெண்ணிடம் நீதிபதி தொடர்பில் இல்லை. அதனால், ஆத்திரமடைந்த சந்தியா சிங், நீதிபதி மகேந்திர குமார் திரிபாதி மற்றும் அவரது முழு குடும்பத்தினரை ஒழிக்க திட்டமிட்டார்.

இதற்கிடையே, ‘குடும்பத்தில் நல்லிணக்கம்’ பெறவேண்டி உள்ளதால் பூஜையில் வைத்து வழிபாடு செய்வதற்காக கோதுமை மாவு கொடுக்குமாறு சந்தியா சிங், நீதிபதியிடம் கேட்டுள்ளார். அவரும் கோதுமை மாவு ெகாடுத்துள்ளார்.

இதற்காக, ‘அமா னுஷ்ய’ பாபா என்று அழைக்கப்படும் சாமியார் ராம்தயால் என்பவரை சந்தியா சிங் சந்தித்து, நீதிபதியின் குடும்பத்தை ஒழிக்க உதவி கேட்டுள்ளார்.

சாமியார் உட்பட டிரைவர் சஞ்சு, தேவில்லால் சந்திரவன்ஷி, முபின் கான், கமல் ஆகியோரின் ஆலோசனையின்படி சப்பாத்தி தயார் செய்யப்படும் கோதுமை மாவில் விஷம் கலக்கப்பட்டது. பின்னர் அதனை சந்தியா சிங், நீதிபதி வீட்டிற்கு சென்று கொடுத்தார்.

அதனை அவர்கள் சமைத்து சாப்பிட்டதில் நீதிபதியும், அவரது மகனும் இறந்துவிட்டனர். குற்றம்சாட்டப்பட்ட பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்’ என்று போலீசார் தெரிவித்தனர்.



இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சிமலா பிரசாத் கூறுகையில், ‘சந்தியா சிங் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிந்த்வாராவில் நீதிபதியுடன் தொடர்பில் இருந்தார். நீதிபதி பெதுலுக்கு இடமாறிய பின்னர், ​​சந்தியாவால் அவரை சந்திக்க முடியவில்லை.

இதனால், இருவருக்கும் இடையே கசப்புணர்வு ஏற்பட்டது. பணம் கேட்டும் சந்தியா சிங் நீதிபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மந்திரவாதியான ராம்தயால் பாபா உதவியுடன் நீதிபதியின் குடும்பத்தை திட்டமிட்டு கோதுமை மாவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்’ என்றார்.


.

மூலக்கதை