ரஜத் பாட்யா ஓய்வு | ஜூலை 29, 2020

தினமலர்  தினமலர்
ரஜத் பாட்யா ஓய்வு | ஜூலை 29, 2020

புதுடில்லி: டில்லி கிரிக்கெட் வீரர் ரஜத் பாட்யா ஓய்வை அறிவித்தார்.

இந்திய உள்ளூர் கிரிக்கெட் வீரர் ரஜத் பாட்யா 40. டில்லியை சேர்ந்த இவர், ஆரம்ப காலத்தில் (1999–00 முதல் 2005–06) தமிழக அணிக்காக களமிறங்கினார். அதன்பின் டில்லி அணிக்காக (2005–06 முதல் 2015) விளையாடிய இவர், கடைசியாக உத்தரகாண்ட் அணி (2018–2019) சார்பில் பங்கேற்றார். ‘ஆல்–ரவுண்டரான’ இவர், 112 முதல் தரம் (6482 ரன், 137 விக்கெட்), 119 ‘லிஸ்ட் ஏ’ (3038 ரன், 93 விக்கெட்), 146 ‘டுவென்டி–20’ (1251 ரன், 111 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2007–08 சீசனில் கோப்பை வென்ற டில்லி அணியில் இடம் பிடித்திருந்தார்.

கடந்த 2014ல் நடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான இந்திய உத்தேச அணியில் இடம் பிடித்திருந்த இவருக்கு, சர்வதேச போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரில் டில்லி (2008–10), கோல்கட்டா (2011–13), ராஜஸ்தான் (2014–15) மற்றும் புனே (2016–17) அணிகளுக்காக பங்கேற்றார். கடந்த 2012ல் கோப்பை வென்ற கோல்கட்டா அணியில் இடம் பிடித்திருந்தார்.

இந்நிலையில் ரஜத் பாட்யா, ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து இவர் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு தான் ஓய்வு பெறுவது குறித்து முடிவு செய்தேன். கொரோனா காரணமாக போட்டிகள் எதுவும் இல்லாததால், இம்முடிவை அறிவிக்க சரியான நேரமாக கருதினேன். ஐ.பி.எல்., தொடரில் 3 முறை சச்சினை ‘அவுட்’ செய்ததை என்றும் மறக்க முடியாது. 2012ல் ஐ.பி.எல்., கோப்பை வென்ற கோல்கட்டா அணியில் இருந்தது மகிழ்ச்சி,’’ என்றார்.

மூலக்கதை