பிராட் சாதனையை பாராட்டுங்க: யுவராஜ் சிங் விருப்பம் | ஜூலை 29, 2020

தினமலர்  தினமலர்
பிராட் சாதனையை பாராட்டுங்க: யுவராஜ் சிங் விருப்பம் | ஜூலை 29, 2020

புதுடில்லி: ‘‘ஸ்டூவர்ட் பிராட் சாதனையை ரசிகர்கள் பாராட்ட வேண்டும்,’’ என, யுவராஜ் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2007ல் டர்பனில் நடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் இந்திய ‘ஆல்–ரவுண்டர்’ யுவராஜ் சிங், 6 சிக்சர் விளாசினார். இதனால் பிராட்டின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடும் என்று பலரும் கருதினர். இதிலிருந்து மீண்டு வந்த இவர், சிறந்த பவுலராக எழுச்சி கண்டார்.

சமீபத்தில் மான்செஸ்டரில் நடந்த விண்டீசுக்கு எதிரான 3வது டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் கைப்பற்றினார். இப்போட்டியில் விண்டீசின் கிரெய்க் பிராத்வைட்டை அவுட்டாக்கிய இவர், டெஸ்ட் அரங்கில் தனது 500வது விக்கெட்டை பதிவு செய்தார். இதன்மூலம் இம்மைல்கல்லை எட்டிய 7வது சர்வதேச பவுலர், 2வது இங்கிலாந்து பவுலரானார்.

 

இதுகுறித்து யுவராஜ் சிங் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட பாராட்டு செய்தியில், ‘‘ஒவ்வொரு முறையும் ஸ்டூவர்ட் பிராட் பற்றி ஏதாவது எழுதும் போது, நான் அவரது பந்தில் தொடர்ச்சியாக 6 சிக்சர் விளாசியதை ரசிகர்கள் தொடர்பு படுத்துகின்றனர். இப்போது எனது ரசிகர்கள் அனைவரும் அவரை பாராட்டும்படி கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட் என்பது எளிதானதல்ல. இது, இவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் மன உறுதிக்கு கிடைத்தது. பிராட், நீங்கள் ஒரு ஜாம்பவான். உங்கள் சாதனை தொடர வாழ்த்துகிறேன்’’ என, தெரிவித்திருந்தார்.

மூலக்கதை