இந்திய அணியின் பலம் என்ன: காம்பிர் கணிப்பு | ஜூலை 29, 2020

தினமலர்  தினமலர்
இந்திய அணியின் பலம் என்ன: காம்பிர் கணிப்பு | ஜூலை 29, 2020

மும்பை: ‘‘ஆஸ்திரேலிய மண்ணில் சாதிக்க இந்திய அணியின் பந்துவீச்சு முக்கிய பங்குவகிக்கும்,’’ என, காம்பிர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில், வரும் டிச. 3–7 ல் நடக்கிறது. அதன்பின் அடிலெய்டு (டிச. 11–15), மெல்போர்ன் (டிச. 26–30), சிட்னியில் (2021, ஜன. 3–7) நடக்கின்றன.

கடந்த 2018–19ல் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. இதேபோல இம்முறை கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் கவுதம் காம்பிர் கூறியது: இம்முறை ஆஸ்திரேலிய மண்ணில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இந்திய அணி பந்துவீச்சு பலமாக உள்ளது. இவர்கள், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுப்பர். கடந்த முறை ஆஸ்திரேலிய ‘பேட்டிங்’ வரிசையில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இடம் பெறவில்லை. இம்முறை இவர்கள் இருப்பது, இந்திய பவுலர்களுக்கு சவாலாக இருக்கும். இருப்பினும் நமது பவுலர்கள் சிறப்பாக செயல்படுவர் என நம்புகிறேன்.

இவ்வாறு காம்பிர் கூறினார்.

மூலக்கதை