இன்று மாலை 5 ரபேல் விமானங்கள் இந்தியா வருகை; அம்பாலா விமானம் தளம் அருகே 144 தடை...ஈரான் ஏவிய ஏவுகணையால் திடீர் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்று மாலை 5 ரபேல் விமானங்கள் இந்தியா வருகை; அம்பாலா விமானம் தளம் அருகே 144 தடை...ஈரான் ஏவிய ஏவுகணையால் திடீர் பரபரப்பு

அம்பாலா: பிரான்சில் இருந்து 5 ரபேல் போர் விமானங்கள் இன்று வருவதை அடுத்து, அரியானாவின் அம்பாலா விமானப்படை தளம் அருகே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தஃப்ரா விமான தளம் அருகே ஈரான் ஏவுகணை சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


ஐரோப்பிய நாடான பிரான்சில் இருந்து, ரூ. 59 ஆயிரம் கோடி செலவில், 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. இவற்றில், முதல்கட்டமாக ஐந்து ரபேல் விமானங்கள் பிரான்சில் இருந்து நேற்று முன் தினம் புறப்பட்டன.

இவை 7,000 கி. மீ பயணம் செய்து அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்துக்கு இன்று மாலை வந்தடைகின்றன.

இதையொட்டி, அம்பாலாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் விமானப்படை தளம் கண்காணிக்கப்படுகிறது.

புகைப்படங்கள் மற்றும் வீடியோ’ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானங்கள் தரையிறங்கும் போது வீடுகளின் மாடியில் இருந்து புகைப்படம் எடுப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இந்த நடவடிக்கைகள் முக்கியமானவை என்று விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், ஐந்து ரபேல் ஜெட் விமானங்கள் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.



விமானம் நிறுத்தப்படுவதற்கு முன் ஈரான் அரசாங்கம் தங்களது நாட்டின் ஏவுகணை ஒன்றை பயிற்சியில் ஈடுபடுத்தியது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானத்தளம் குறி வைக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டது.

இதற்கிடையே, அல் தஃப்ரா விமான நிலையம் அருகே ஈரான் ஏவிய ஏவுகணை விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவுக்கான சிஎன்என் செய்தி நிறுவனம் வௌியிட்ட செய்தியில், ‘ஈரான் ஏவுகணைகள் தாக்க வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய அமீரகத்தில் உள்ள தல் தஃப்ரா தளத்திற்கும், கத்தாரில் உள்ள அல் உதெய்த் விமான தளத்திற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இருந்தாலும், ரபேல் ஜெட் விமானங்கள் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருக்கின்றன’ என்று தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை