தற்கொலைக்கு தூண்டியதாக தந்தை புகார்; மறைந்த நடிகர் சுஷாந்த் காதலி ரியா மீது வழக்கு: பாட்னாவில் இருந்து மும்பை விரைந்தது போலீஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தற்கொலைக்கு தூண்டியதாக தந்தை புகார்; மறைந்த நடிகர் சுஷாந்த் காதலி ரியா மீது வழக்கு: பாட்னாவில் இருந்து மும்பை விரைந்தது போலீஸ்

பாட்னா: மறைந்த நடிகரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் காதலி ரியா உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், நடிகையிடம் விசாரணை நடத்த பாட்னாவில் இருந்து மும்பைக்கு போலீசார் விரைந்துள்ளனர்.

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (34) கடந்த ஜூன் 14ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலைக்கான காரணத்தை கண்டறிவதற்காக போலீசார் அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் நடிகர்கள் உள்பட 38 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்து உள்ளனர்.

இந்த நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா  சக்கரபோர்த்தி மீது நடிகர் சுஷாந்த்  தந்தை பீகார் மாநிலம் பாட்னா போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ‘சுஷாந்த் சிங் ராஜ்புத்திடம்  நிதி முறைகேட்டில் ஈடுபட்டு அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு ரியா தூண்டியுள்ளார்.

சுஷாந்த் சிங்கின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரியா சக்கரபோர்த்தி பணம்  எடுத்துள்ளார். அவரை மன ரீதியாக டார்ச்சர் கொடுத்தார்’ என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார்  ரியா  சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர் 6 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எப். ஐ. ஆர். பதிவு செய்துள்ளனர்.

மும்பை போலீசார் ஏற்கனவே திரைப்பட தயாரிப்பாளர்கள் மகேஷ் பட், சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்களை விசாரித்துள்ளனர். காதலி ரியா சக்கரபோர்த்தியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.



தற்போது பாட்னா போலீசார் ரியா மீது வழக்குபதிவு செய்துள்ளததால், 4 பேர் கொண்ட தனிப்படை மும்பையில் உள்ள நடிகை ரியா சக்கரபோர்த்தியிடம் விசாரணை செய்ய விரைந்துள்ளது. இதற்கிடையே, பிரபல போஜ்புரி நடிகரும், டெல்லி பாஜகவின் முன்னாள் தலைவரும், வடகிழக்கு டெல்லி பாஜக எம்பியுமான மனோஜ் திவாரி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘43 நாள்களுக்கு முன்பு உயிரிழந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேயிடம் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு அவரது லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும். மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

சுஷாந்த் சிங் மரணத்துக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

.

மூலக்கதை