சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமியை தொடர்ந்து கவர்னரின் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு: தலைமைச் செயலாளரின் தாயாருக்கும் கொரோனா என தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமியை தொடர்ந்து கவர்னரின் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு: தலைமைச் செயலாளரின் தாயாருக்கும் கொரோனா என தகவல்

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமியை தொடர்ந்து கவர்னரின் உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழக தலைமை செயலாளர் சண்முகம் தாயாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கிண்டி கிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்ட வருகிறது. தினசரி சுமார் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.



கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது வரை 4 அமைச்சர்கள் உள்ளிட்ட 21 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபேன்று கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் கிண்டி கிங் மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதனைத் தொடர்ந்து கடற்கரை ரயில் நிலையம் அருகில் உள்ள மாவட்ட ஆட்சியர் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியருடன் தொடர்பில் இருந்த உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதைப்போன்று கீழ்பாக் கார்டன் தெருவில் உள்ள அவரது வீட்டில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா சோதனை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமசுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல தலைமை செயலாளர் சண்முகத்தின் தாயாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்கள் இருவரும் சென்னை, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மருத்துவமனையில் தற்போது, முக்கிய விவிஐபிக்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழக தலைமை செயலாளர், கடந்த சில நாட்களாக முதல்வர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

தற்போது அவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வாரா? அல்லது அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை