பத்திரப்பதிவு மேலும் எளிமையானது இணையதளம் மூலம் ஆவணங்களை பொதுமக்கள் உருவாக்கலாம்: அரசு தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பத்திரப்பதிவு மேலும் எளிமையானது இணையதளம் மூலம் ஆவணங்களை பொதுமக்கள் உருவாக்கலாம்: அரசு தகவல்

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: பதிவுத்துறைக்கான ஸ்டார் 2. 0 ஆன்லைன் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் நோக்கம், பாகுபாடற்ற சேவைகளை வெளிப்படையாக பொதுமக்களுக்கு வழங்குவதாகும்.

இந்த நோக்கத்திற்கு ஏற்ப மென்பொருளில் `பொதுமக்களே ஆன்லைன் வழி ஆவணங்களை உருவாக்கும் எளிய வழிமுறை’ உருவாக்கப்பட்டுள்ளது. https://tnreginet. gov. in என்ற இணையதளத்தில், பொதுமக்கள் என்ற வகைப்பாட்டில் புதிய உள்நுழைவை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். பிறகு பயனர் பெயர், கடவுச்சொல்லை உள்ளீடு செய்ய வேண்டும்.

அதை தொடர்ந்து, பதிவு செய்தல் - ஆவண பதிவு - ஆவணத்தினை உருவாக்குக என்பதை தெரிவு செய்ய வேண்டும். ஆவணத்தை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் உருவாக்கி கொள்ளலாம்.

ஆவணத்தை உருவாக்க கீழ்க்கண்ட விவரங்களை உட்புகுத்த வேண்டும்.

* தாங்கள் பதிவு செய்ய விரும்பும் ஆவணத்தின் தன்மையை அதாவது, அந்த ஆவணம் விற்பனை ஆவணமா, தான செட்டில்மெண்ட் ஆவணமா, குத்தகை ஆவணமா, அடமான ஆவணமா போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
* சொத்தை விற்பவர், அந்த சொத்தை வாங்கிய முன் ஆவண விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். பூர்வீக சொத்தாக இருப்பின் இதனை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை.
* எழுதி கொடுப்பவரின் பெயர், தந்தை பெயர், முகவரி போன்ற விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.

முன் ஆவணத்தில் இருந்தும் விவரங்களை நகல் செய்யலாம்.
* எழுதி பெறுபவரின் பெயர், தந்தை பெயர், முகவரி போன்ற விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். முன் ஆவணத்தில் இருந்தும் விவரங்களை நகல் செய்யலாம்.
* பொது அதிகாரம் முகவர் மற்றும் சாட்சிகளின் விவரங்கள் எழுதி கொடுப்பவர் அல்லது எழுதிபெறுபவர் பொது அதிகாரம் அளித்திருப்பின் முகவரின் பெயர் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.

மேலும் குறைந்தபட்சம் 2 சாட்சிகளின் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
* சொத்து விவரத்தின் கீழ் சர்வே எண், சொத்தின் பரப்பு, பட்டா எண் போன்றவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். கைமாற்று தொகை, அது செலுத்தப்பட்ட விவரத்தினையும் உள்ளீடு செய்ய வேண்டும்.
* சொத்தின் 4 எல்லைகளின் விவரம், சொத்து குறித்த மற்ற விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
* கட்டிடம் இருப்பின் அதன் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
* மேலே குறிப்பிட்ட விவரங்களை நிரப்பியவுடன் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் தானாகவே திரையில் தோன்றும்.

கட்டணங்களை இணையதளம் வழி செலுத்தலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை