கேரள தங்கம் கடத்தல் வழக்கு சிவசங்கரிடம் இன்று மீண்டும் கிடுக்கிப்பிடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரள தங்கம் கடத்தல் வழக்கு சிவசங்கரிடம் இன்று மீண்டும் கிடுக்கிப்பிடி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் கைதான சொப்னா கும்பலுடன், மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக ெகாச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் நேற்று சுமார் 9 மணிநேரம் அதிகாரிகள் குழுவினர் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

அப்போது அவரிடம் இருந்து கிடைத்த பதில், சொப்னா கும்பல் அளித்த வாக்கு மூலம் ஆகியவற்றை பரிசோதித்து பார்த்த போது பல விஷயங்களை சிவசங்கர் மறைத்துள்ளது விசாரணை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து மீண்டும் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு என்ஐஏ அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.



ஆகவே நேற்று இரவு கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் சிவசங்கர் தங்கினார். இன்றைய விசாரணையின் போது சிவசங்கரின் பதில்கள் திருப்தி அளிக்காவிட்டால் இதுவரை அவருக்கு எதிராக கிடைத்த ஆதாரங்களை வைத்து கைது செய்ய என்ஐஏ அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் நேற்று என்ஐஏ டிஐஜி வந்தனா தலைமையிலான குழுவினர் 9 மணி நேரம் விசாரித்தனர். இந்த விசாரணை அறிக்கையை டிஐஜி டெல்லியில் உள்ள என்ஐஏ தலைவருக்கு அனுப்பி இருக்கிறார்.

அதில் கூறி இருப்பதாவது: விசாரணைக்கு சிவங்கர் முழுமையாக ஒத்துழைக்கவில்லை. அவருக்கு கிடைத்த சட்ட ஆலோசனைப்படியே பதில் அளித்து வருகிறார்.



பல கேள்விகளுக்கு மிகவும் தந்திரமாக பதில் கூறுகிறார். இதுவரை குற்றவாளிகளிடம் விசாரணை நடத்துவதுபோல அவரிடம் விசாரணை நடத்தவில்லை.

ஐஏஎஸ் அதிகாரி என்பதால் அவருக்கு சில சலுகைகள் அளிக்கப்பட்டன. இதை பயன்படுத்தியும், சட்ட ஆலோசனைபடியுமே பதில் அளித்து வருகிறார்.

சொப்னாவுக்கு அரசு வேலை வாங்கி கொடுத்தது, அந்த கும்பலுடன் இருக்கும் தொடர்பு குறித்து கேட்டபோது சில தவறு நடந்திருப்பதை ஒப்புக்கொண்டார். இவ்வாறு சம்மதிப்பதன் மூலம் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து அவர் விடுவிக்கப்படலாம் அல்லது வழக்கில் சாட்சியாக சேர்க்கப்படலாம் என்று அவருக்கு கிடைத்த சட்ட ஆலோசனைபடியே பதிலளித்துள்ளார்.



நாளை (இன்று) விசாரணையை மேலும் கடுமையாக்க தீர்மானித்துள்ளோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொச்சி என்ஐஏ அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் உள்ள ஓட்டலில் சிவசங்கர் அறை எடுத்து தங்கியிருந்தார்.

அங்கிருந்து இன்று காலை 9. 48 மணியளவில் புறப்பட்ட அவர், 9. 50க்கு என்ஐஏ அலுவலகம் வந்தடைந்தார். இதையடுத்து 10 மணியளவில் அவரிடம் 2வது நாள் விசாரணை தொடங்கியது.

அதிகாரிகள் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு வருகின்றனர்.


சொப்னாவுக்கு வேலை வழங்கியது எப்படி
ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சொப்னா கடந்த 6 மாதமாக கேரள அரசின் ஐடி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்பேஸ்பார்க் திட்ட மேலாளராக பணியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு மாதம் ரூ. 1. 75 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தான் அவர் 10ம் வகுப்பு கூட தேர்வாகாதவர் என்பது உறுதியானது. 10ம் வகுப்பு தேர்வாகாத இவருக்கு எப்படி உயர் பதவி கிடைத்தது என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் சிவசங்கரிடம் நேற்று நடந்த விசாரணையின்போது கேட்டனர்.

அப்போது தூதரகத்தை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டதாலேயே அவருக்கு பணி வழங்கியதாக அவர் கூறியதாக தெரிகிறது. மேலும் சொப்னா வீட்டுக்கு அடிக்கடி சென்றது ஏன் என அதிகாரிகள் கேட்டபோது, சொப்னாவின் கணவர் தனக்கு உறவினர் என்பதால் அவரது அழைப்பின்பேரில் அவரது வீட்டிற்கு சென்று வந்ததாக கூறியுள்ளார்.



ஒரு வருட சிசிடிவி பதிவு மாற்றம்
சொப்னா கும்பல் அடிக்கடி திருவனந்தபுரம் தலைமை செயலகத்துக்கு சென்று சிவசங்கரை சந்தித்து பேசியதாக என்ஐஏவுக்கு தகவல் கிடைத்தது. இவர்கள் முதல்வர் அலுவலகத்துக்கும், உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீல் அலுவலகத்துக்கும் சென்றதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து தலைமை செயலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று என்ஐஏ ஏற்கனவே கேரள தலைமை செயலாளரிடம் கேட்டிருந்தது.

இதற்கு தலைமை செயலாளர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து ஒரு வருடம் தினமும் பதிவான காட்சிகள் அனைத்தையும் என்ஐஏவின் ஹார்டு டிஸ்கில் பதிவு செய்ய என்ஐஏ முடிவு செய்துள்ளது.

இந்த பணி இன்று தொடங்கியது.


.

மூலக்கதை