நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க உத்தரவு: காங்கிரசுக்கு தாவிய 6 பிஎஸ்பி எம்எல்ஏக்களுக்கு சிக்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க உத்தரவு: காங்கிரசுக்கு தாவிய 6 பிஎஸ்பி எம்எல்ஏக்களுக்கு சிக்கல்

முதல்வர் கெலாட் அரசுக்கு மாயாவதி திடீர் எதிர்ப்பு
ராஜஸ்தானில் அடுத்தடுத்த அரசியல் திருப்பத்தால் பரபரப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் அரசு நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்தால் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிக்க காங்கிரசில் இணைந்த 6 பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்களுக்கு, அக்கட்சி சார்பில் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. அதனால், முதல்வர் கெலாட் அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.   ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.

கட்சியின் கொறடா உத்தரவை மீறிய சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களுக்கு எதிராக தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிரான வழக்கில், 19 எம்எல்ஏக்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தடைவிதித்தது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் ஆயத்தமாகி வருவதால், சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்து வலியுறுத்தினார்.

ஆனால், அசோக் கெலாட்டின் கோரிக்கைக்கு ஆளுநர் இசைவு கொடுக்காததால், ராஜஸ்தான் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு புதிய பரிந்துரையை அசோக் கெலாட்  விடுத்துள்ளார்.   அதாவது, ‘வருகிற 31ம் தேதி சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்; கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாக பேரவையில் விவாதிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால், முதல்வரின் பரிந்துரை கடிதத்தில், அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து எதுவும் இடம் பெறவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

அதனால், ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தரப்பில், ‘சட்டப் பேரவையை கூட்டுவது தொடர்பாக அளிக்கப்பட்ட முந்தைய பரிந்துரையில், கூட்டத்தொடர் நடைபெறும் தேதி, விவாதிக்கப்படும் அம்சங்கள் குறித்த தகவல் இல்லை’ எனக்கூறி, அசோக் கெலாட்டின் பரிந்துரையை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் விவகாரத்தில் பாஜக-காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு மாநில காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவளித்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) 6 எம்எல்ஏக்களும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிக்க கூடாது என்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அக்கட்சியின் தேசிய பொதுச் ெசயலாளர் சதீஸ் சந்திர மிஸ்ரா வெளியிட்ட அறிக்கையில், ‘2019ல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் ஆறு எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர்.



தற்போதைய நிலையில் பேரவையில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால், காங்கிரசுக்கு எதிராக 6 எம்எல்ஏக்களும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்’ என்று அறிவித்துள்ளார். ஆனால், கடந்த செப்.

2019ல், ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆறு எம்எல்ஏக்களும் காங்கிரசில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் கூட, தற்போது காங்கிரஸ் கட்சியின் பக்கம் சாய்ந்துள்ளதால், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிக்க முடியுமா? என்பது புதிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.



இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா கூறுகையில், ‘பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜஸ்தான் எம்எல்ஏக்கள் 6 பேரும், அதன் தேசியத் தலைவர் மாயாவதியால் களம் இறக்கப்பட்டவர்கள். காங்கிரஸ் அரசுக்கு எதிராக 6 பேரும் வாக்களிக்க கட்டுப்பட்டவர்கள்.

பகுஜன் சமாஜ் கட்சி அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சி என்பதால், அரசியலமைப்பின் 10வது அட்டவணையின்படி 6 எம்எல்ஏக்களும் மாநில அளவில் எந்த கட்சியுடனும் தங்களை இணைத்துக் கொள்ள முடியாது. ஆறு எம்எல்ஏக்களும் காங்கிரசுடன் இணைவதை, பகுஜன் சமாஜ் கட்சி அங்கீகரிக்கவில்லை’ என்றார்.



இதற்கிடையில், பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்களை காங்கிரசுடன் இணைப்பதை ரத்து செய்யுமாறு பாஜக தலைவர் மதன் திலாவர் தாக்கல் செய்த மனு ராஜஸ்தான் உயர்நீதிமன்ற விசாரணையில் உள்ளது. அதனால், 6 எம்எல்ஏக்கள் விவகாரத்தில், அடுத்த நீதிமன்ற உத்தரவு வரும் வரை, அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க முடியுமா? காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிக்க முடியுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

முன்னதாக, சச்சின் உட்பட 19 அதிருப்தி எம்எல்ஏக்கள்மீது சபாநாயகர் தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று, ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானின் ‘நம்பர் கேம்’
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மொத்த எம்எல்ஏக்கள் 200 பேரில் காங்கிரஸ் (81) மற்றும் ஆதரவு கட்சிகள் பி. டி. பி (2), பகுஜன் சமாஜ் கட்சி (6) சி. பி. எம் (2), ஆர். எல். டி (1), சுயேட்சை (12) ஆகியவற்றுடன் 104 எம்எல்ஏக்களின் ஆதரவை முதல்வர் கெலாட் பெற்றுள்ளார். பெரும்பான்மை பலத்திற்கு 101 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பதால், காங்கிரசில் இணைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது காங்கிரசுக்கு ஆதரவளிக்க முடியுமா? என்ற சட்டச் சிக்கல் நீடிக்கிறது.

அதேநேரம், எதிர்கட்சி வரிசையில் உள்ள பாஜக (72), காங்கிரஸ் அதிருப்தி சச்சின் பைலட் ஆதரவு (19), ஆர். எல். பி (3), ஒரு சுயேட்சை எம்எல்ஏக்களும் உள்ளனர். எப்படியாகிலும் முதல்வர் கெலாட், பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியுமா? என்பது ெபரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெட்டுக்கிளியுடன் போராடும் எம்எல்ஏ
ராஜஸ்தான் அரசியல் பரபரப்பு ஒருபக்கம் இருக்க, பிகானேரின் துங்கர்கர் தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏவான கிர்தாரிலால் மஹியா (62) தனது வயலை வெட்டுக்கிளிகளிலிருந்து பாதுகாப்பதில் மும்முரமாக உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்குள் உட்கார்ந்து கொள்வதற்காக அல்ல.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருக்கும் ஓட்டலின் பெயர் கூட எனக்குத் தெரியாது.  

வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடும் சக விவசாயிகளின் குறைகளை கவனிக்கிறேன்.

பருத்தி, நிலக்கடலை அல்லது பிற பயிர்களாக இருந்தாலும், வெட்டுக்கிளி தாக்குதலை அடுத்து விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றனர். இந்த நேரத்தில் மக்கள் பிரதிநிதிகளும், அரசியல் கட்சிகளும் சண்டையிடுவதில் மும்முரமாக உள்ளன’ என்றார்.

விவசாயியான கிர்தாரிலால், 2018ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை