இம்மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று இறுதி கட்ட முழு ஊரடங்கு; முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின

தமிழ் முரசு  தமிழ் முரசு
இம்மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று இறுதி கட்ட முழு ஊரடங்கு; முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின

சென்னை: இம்மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று கடைசி கட்ட, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து, தேவையில்லாமல் வெளியே நடமாடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனால் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிசோடி காணப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வரும் 31ம் தெதி வரை 6 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது.

ஆனாலும், பொதுமக்கள் ஊரடங்கை முறையாக கடைபிடிக்காமல்  அலட்சியம் காட்டியதன் விளைவாகவும், அரசின் குழப்பமான நடவடிக்கைகளாலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் இதுவரை 2,06,737 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் சென்னையில் 93,537 பேரும், பிற மாவட்டங்களில் 1,13,200 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,51,055 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.



3,409 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 29ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி கடந்த 5, 12, 19ம் தேதிகளில் கடுமையான முழு ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டது. இம்மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று, கடைசி கட்ட தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஊரடங்கு நேரத்தில் தளர்வுகளுடன் அனுமதி அளிக்கப்பட்ட காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் இயங்க அனுமதி இல்லாததால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. பால் மற்றும் மருந்து கடைகள், பத்திரிகை விற்பனையகம் மட்டும் வழக்கம் போல் இயங்கியது.



மேலும் அரசு அனுமதி அளித்துள்ள வாகனங்கள் மற்றும் பால் மற்றும் மருத்துவ பணிகள் சார்ந்த வாகனங்கள் மட்டும் ஓடின. அந்த வாகனங்களையும் போலீசார் நிறுத்தி சோதனை செய்த பிறகு தான் அனுமதித்தனர்.

இதனால் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், சேலம், நெல்லை உள்பட தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. மருந்து கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ தேவைக்கு தவிர யாரும் வெளியே வரக்கூடாது என்று எச்சரித்து இருந்தனர். அதையும் மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியே வந்து நடந்து சென்றவர்களுக்கும் கூட அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னையின் முக்கிய சாலைகளான பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, காமராஜர் சாலை, அண்ணாசாலை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற முக்கியமான சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



இதனால் சென்னையின் முக்கிய சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. அதையும் மீறி காரணங்களே இல்லாமல் சாலைகளில் சென்ற வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் இந்த முழு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் நகரின் உள்பகுதிகளில் சுற்றி திரிபவர்களை கண்காணிக்க காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதைத்தவிர்த்து “ட்ரோன்” காமிரா மூலம் அனைத்து தெருக்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கடந்த 5, 12, 19ம் தேதிகளில் மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும் சென்னையில் மட்டும் ஓரளவுக்கு கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தினாலும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

தமிழகத்தின் பிறமாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று 6,988 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் சென்னையில் 1,329 பேருக்கும், மற்ற மாவட்டங்களில் 5,659 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, ஆகஸ்ட் மாதத்தில் உள்ள 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும்  தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்று பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

.

மூலக்கதை