எம்எல்ஏவுக்கு தொற்று எதிரொலி; புதுவை அமைச்சர், எம்எல்ஏக்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
எம்எல்ஏவுக்கு தொற்று எதிரொலி; புதுவை அமைச்சர், எம்எல்ஏக்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை

புதுச்சேரி: புதுச்சேரியில் எதிர்கட்சியான என்ஆர் காங்கிரஸ் மாநில செயலாளரும், கதிர்காமம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெயபாலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. கடந்த 20ம் தேதி புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதில் எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் ஜெயபால் உள்பட என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். எம்எல்ஏவுக்கு தொற்று காரணமாக சட்டசபையின் மைய மண்டபம் நேற்று மூடப்பட்டதோடு, சட்டசபை வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இதனால் பட்ஜெட் கூட்டத்தை திறந்தவெளியில் கூட்டி விவாதமின்றி நிதி ஒதுக்கீடு மசோதாவுக்கான ஒப்புதலை பெற முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, சட்டசபை வளாகத்தில் நுழைவு வாயில் அருகே மரத்தடியில் திறந்தவெளியில் பந்தல், இருக்கைகள் அமைக்கப்பட்டு நேற்று மதியம் 1. 30 மணிக்கு சட்டசபை கூடியது.



தொடர்ந்து பட்ஜெட் மீது பொது விவாதம்  நடந்தது. இதையடுத்து, இறுதியாக நிதி ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

தொடர்ந்து, பிற்பகல் 3. 47க்கு சபையை காலவரையின்றி சபாநாயகர் சிவக்கொழுந்து ஒத்தி வைத்தார். இந்நிலையில், எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதியானதால் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பத்திரிகையாளர் உள்பட சட்டசபை பணியில் இருந்த அனைவருக்கும் நாளை (திங்கட்கிழமை) கொரோனா பரிசோதனை செய்ய முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால்,  அக்கட்சியின் நிறுவனரும், எதிர்கட்சி தலைவருமான ரங்கசாமி அவரது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டார்.

இதேபோல் சட்டசபையில் ஜெயபால் இருக்கைக்கு அருகில் இருந்த மேலும் சில எம்எல்ஏக்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.

.

மூலக்கதை