வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் கலெக்டர்களுடன் 29ம் தேதி முதல்வர் ஆலோசனை: ஊரடங்கு நீடிப்பா? தளர்வா? என்பது குறித்து முக்கிய முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் கலெக்டர்களுடன் 29ம் தேதி முதல்வர் ஆலோசனை: ஊரடங்கு நீடிப்பா? தளர்வா? என்பது குறித்து முக்கிய முடிவு

சென்னை: தமிழகத்தில் வருகிற 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 29ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார். அப்போது ஊரடங்கை மேலும் நீடிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்பது குறித்து முக்கிய முடிவு எடுத்து அறிவிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 6 கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் 31ம் தேதியுடன் தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு முடிவுக்கு வருகிறது.

கடந்த 4 மாதங்கள்  ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. கடைகள் திறக்கலாம், தொழிற்சாலைகள் இயங்கலாம், ஆட்டோ, டாக்சி ஓடலாம், அரசு-தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, கோவை, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இ-பாஸ் இருந்தால் மட்டுமே வெளிமாவட்டங்களுக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.

இதனால் சொந்த மாவட்டங்களுக்கு கூட செல்ல முடியாமலும், திருமண காரியங்கள் நடத்த முடியாமலும், பெற்றோர், உறவினர்களை கூட பார்க்க முடியாமல் 4 மாதமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும் தினசரி புதிய புதிய  கட்டுப்பாடுகளை விதித்து வருவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் 31ம் தேதியுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.

அதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஆகஸ்டு 1ம் தேதிக்கு பிறகு  ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்பட்டு மீண்டும் சகஜநிலை திரும்புமா? அல்லது மீண்டும் ஊரடங்கு  நீட்டிக்கப்படுமா? என்னென்ன தளர்வுகள் கிடைக்கும் என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 29ம் தேதி (புதன்) காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த கூட்டத்தில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது பல்வேறு கட்டுப் பாடுகளுடன் ஊரடங்கை கைவிடுவதா? என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் கொரோனா தொற்று குறைந்த பாடில்லை.

தினசரி அதன் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது.

குறிப்பாக தமிழகத்தில் நேற்று மட்டும் 6,988 பேர் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சென்னையில் மட்டும் 1,329 பேர் ஆகும். முக்கியமாக தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இந்த மாதத்துடன் ஊரடங்கை முடித்துக் கொள்ள முடியாது.

அதேநேரம், பக்கத்துக்கு மாநிலமான கர்நாடகாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

அவர்களும், கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு ஆகாது. பெரிய கோடாரியை கொண்டு கொசுவை அடிப்பது போன்றது தான் இந்த ஊரடங்கு மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும் என்று கூறினர்.



ஆனாலும், மக்களின் பொருளாதார தேவை அதிகரித்துள்ளதால் கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரம் மாஸ்க், சமூக இடைவெளியை அவர்கள் பின்பற்ற வேண்டும்.

அதனால், வரும் 29ம் தேதி நடைபெறும் மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தில், தமிழகத்தில் கூடுதலான தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக கடைகள் திறந்திருக்கும் நேரம் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்படலாம்.

பொது போக்குவரத்துக்கு ஆகஸ்டு மாதமும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது.

இ-பாஸ் நடைமுறைகளை எளிமையாக்குவது, கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.

.

மூலக்கதை