மகாராஷ்டிரா, உத்தரபிரதேச, மேற்கு வங்க முதல்வர்களுடன் நாளை மறுநாள் பிரதமர் ஆலோசனை: கொரோனா தடுப்பு, ஊரடங்கு குறித்து ஆய்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகாராஷ்டிரா, உத்தரபிரதேச, மேற்கு வங்க முதல்வர்களுடன் நாளை மறுநாள் பிரதமர் ஆலோசனை: கொரோனா தடுப்பு, ஊரடங்கு குறித்து ஆய்வு

புதுடெல்லி: மகாராஷ்டிரா, உத்தரபிரதேச,மேற்கு வங்க முதல்வர்களுடன் நாளை மறுநாள் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். அப்போது கொரோனா தடுப்பு, ஊரடங்கு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் 25ம் தேதி நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருந்தும் கொரோனா கட்டுக்குள் வராததால் ஊரடங்கு மேலும் மேலும் நீட்டிக்கப்படுகிறது. தற்போது ஊரடங்கு விதிகளில் பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒரு சில இடங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைகிறது.

இருந்தும், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே பீதியை உண்டாக்கி இருக்கிறது.



நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 48,916 பேர் புதியதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,36,861 ஆக அதிகரித்துள்ள்ளது.

பலியை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 757 பேர் இறந்த நிலையில் மொத்த பலி 31,358 ஆக அதிகரித்துள்ளது. ஏறக்குறைய 3. 5 லட்சம் பாதிப்புகளுடன் மகாராஷ்டிரா மாநிலம் நாட்டிலேயே தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாகும்.

தமிழகம், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் கொரோனா தொற்றால் அதிகம் பாதித்துள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடி மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநில முதல்வர்களுடன் நாளை மறுநாள் (ஜூலை 27) ஆலோசனை நடத்தவுள்ளார்.

கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மறுஆய்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து விவாதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சுகாதார, காவல்துறை மற்றும் முக்கிய மாநில அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.

மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

.

மூலக்கதை