தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு; நடப்பு கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு; நடப்பு கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் 7. 5 சதவீதம் இடஒதுக்கீடு இந்த கல்யாண்டிலேயே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று மாலை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமைச்சரவை கூட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜு, கே. பி. அன்பழகன் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சி. வி. சண்முகம் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆனாலும், கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மூத்த அமைச்சர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக அகில இந்திய அளவில் நடைபெறும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றிபெறும் மாணவ, மாணவிகள்தான் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர முடிகிறது. குறிப்பாக, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பு வரை படித்துவிட்டு நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தேர்வில் வெற்றிபெற்றாலும், அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் மருத்துவ படிப்பு படிக்க முடியாத நிலை உள்ளது.

இதனால் சில மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் தமிழகத்தில் நடந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்று, பின்னர் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேரும் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

இதை கருத்தில் கொண்டு, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

அவர்களுக்கு எத்தனை சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என்பது குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவின் பரிந்துரையை ஏற்று, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7. 5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்து அதற்கான பரிந்துரையை தமிழக ஆளுநருக்கு கடந்த மாதம் அனுப்பி இருந்தது. இந்நிலையில், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயின்று, பிறகு அரசு பள்ளியில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் 7. 5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் எடுத்த முடிவு தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதையடுத்து நடப்பு கல்வியாண்டிலேயே (2020-2021) அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7. 5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படும். இதன்மூலம், மருத்துவ படிப்புகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 150 முதல் 200 வரை உயரும்.   அதேபோன்று, தமிழகத்தில் சுமார் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு 15 நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதி அளிப்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை