எளாவூர் சோதனை சாவடியில் ரூ.2.70 கோடி ஹவாலா பணம் பறிமுதல்; தமிழக அமைச்சருக்கு சென்றதா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
எளாவூர் சோதனை சாவடியில் ரூ.2.70 கோடி ஹவாலா பணம் பறிமுதல்; தமிழக அமைச்சருக்கு சென்றதா?

சென்னை: எளாவூர் சோதனைசாவடியில் இன்று அதிகாலை நடைபெற்ற வாகன சோதனையில், காரில் கடத்தி வந்த ரூ. 2. 70 கோடி ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழக அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனைசாவடி உள்ளது. இவ்வழியாக நாள்தோறும் சென்னையில் இருந்து ஆந்திரா மற்றும் பல்வேறு வடமாநிலங்களுக்கும் ஆந்திராவில் இருந்து சென்னைக்கும் ஏராளமான சரக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன.

அதேபோல் இம்மார்க்கத்தில் கஞ்சா, செம்மரம், கள்ளச்சாராயம், குட்கா உள்ளிட்ட பல்வேறு கடத்தல்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் இங்கு போலீசார் அடிக்கடி வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.



இந்நிலையில், எளாவூர் சோதனைசாவடி வழியாக இன்று அதிகாலை 4 மணியளவில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அவ்வழியாக வந்த ஒரு சொகுசு காரை போலீசார் மடக்கி விசாரித்தனர்.

அதன் டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதில் சந்தேகமான போலீசார், காருக்குள் முழுமையாக சோதனை செய்தனர்.

அப்போது காரின் பின்சீட்டில் 2 டிராவல் பைகளில் ரூ. 2. 70 கோடி ரொக்கப் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. அதற்கான ஆவணங்களும் டிரைவரிடம் இல்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் அது ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரில் இருந்த ஆந்திர மாநிலம், ஓங்கோல் பகுதியை சேர்ந்த நாகராஜ் (32), வசந்த் (36) மற்றும் டிரைவர் லட்சுமி நாராயணன் (38) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.



கைப்பற்றப்பட்ட பணத்தை சென்னை வருமானவரி துறை அதிகாரிகளிடம் ஆரம்பாக்கம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும், இந்த சொகுசு காரின் முன்பக்க கண்ணாடியில் ஆந்திர மாநில எம்எல்ஏ என பொறிக்கப்பட்டு இருந்தது.

அதோடு, இப்பணத்தை ஒரு தமிழக அமைச்சருக்கு கொண்டு செல்வதாகவும் தகவல் கூறப்படுகிறது. இது அமைச்சருக்கு மாமூல் கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டதா? அல்லது ஆந்திராவில் முதலீடு செய்த பணம் போக மீதம் உள்ள பணம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டதா? என்பது தெரியவில்லை.

ஆனால் இது குறித்து எந்த தகவலையும் டிரைவர் மற்றும் காரில் இருந்தவர்கள் தெரிவிக்க மறுத்து வருகின்றனர். ஆந்திர மாநில எம்எல்ஏ குறித்தும் தகவல் தெரிவிக்க மறுத்து வருகின்றனர்.

இதனால் அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னைக்கு வரும் காரில் ரூ. 2. 70 கோடி பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அப்பகுதியில் இன்று காலை பரபரப்பு நிலவியது.

.

மூலக்கதை