சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு போலீஸ்காரர் முத்துராஜிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை; அப்ரூவராக மாறுகிறார்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு போலீஸ்காரர் முத்துராஜிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை; அப்ரூவராக மாறுகிறார்?

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கில் 5வது குற்றவாளியான காவலர் முத்துராஜியிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர் அப்ரூவராக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் இறந்தது தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளை தாமாக முன்வந்து விசாரித்தது. இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 ேபரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனும் விசாரணை நடத்தினார். இந்தநிலையில் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

சிபிஐ கூடுதல் எஸ். பி. சுக்லா தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் 2 கொலை வழக்குகளை பதிவு செய்தனர்.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார் முத்துராஜா, முருகன் ஆகிய 5 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி ஹேமந்த்குமார், குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 பேரையும் 2 நாள் காவலில் வைத்து விசாரிக்கவும் நாளை மாலை 5. 30 மணிக்கு முன்னதாக மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ எந்த தொந்தரவும் செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். பரிசோதனை முடிந்ததும், மதுரை ஆத்திக்குளம் சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று 5 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் படங்கள், வீடியோ காட்சிகளை காட்டியும் விசாரணை நடத்தப்பட்டது. ஒருவரிடம் பெறப்பட்ட தகவல்களை வைத்து, தொடர்புடைய மற்றவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

தகவல்களில் முரண்பாடுகள் இருந்தால் மீண்டும் சம்பந்தப்பட்டவரிடம் விசாரணை நடந்தது.

இதனிடையே காவலர் முத்துராஜை காவலில் எடுத்துக் கொண்டு, சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்றிரவு 10 மணிக்கு வந்த சிபிஐ கூடுதல் எஸ்பி சுக்லா தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர், ஜெயராஜின் மரக்கடை, பென்னிக்சின் செல்போன் கடை மற்றும் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று இரவு 11. 30 மணி வரை விசாரணை நடத்தினர். திடுக்கிடும் தகவல்களை காவலர் முத்துராஜ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணைக்கு பின், இன்று அதிகாலை 2 மணியளவில் மதுரை சிபிஐ அலுவலகத்திற்கு முத்துராஜ் மீண்டும் கொண்டு செல்லப்பட்டார். மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் காவலில் எடுத்த சிபிஐ போலீசார், அவர்களில் 5வது குற்றவாளியான காவலர் முத்துராஜை மட்டும் சாத்தான்குளத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அவரை மட்டும் சாத்தான்குளத்திற்கு அழைத்து வந்து சிபிஐ போலீசார் விசாரணை நடத்தியுள்ளதால் அவர் அப்ரூவராக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், பால்துரை ஆகியோரின் ஜாமீன் மனு இன்று மாலை 6 மணிக்கு தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இவ்வழக்கு மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால், எஸ்ஐக்களின் ஜாமீன் மனுக்களை விசாரிக்கும் அதிகாரம், தூத்துக்குடி கோர்ட்டிற்கு இல்லை என்று சிபிஐ வக்கீல் விஜயன் நேற்று தெரிவித்திருந்தார். அதை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளதால், விசாரணை அதிகாரியின் கையெழுத்தை பெற்று அதை அவர் இன்று மாலை தாக்கல் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை

சிபிஐ காவலுக்கு எடுக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் முடிவுகள் இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.

.

மூலக்கதை