மத்திய அரசின் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட 7 நிறுவனங்கள் விருப்ப விண்ணப்பம் தாக்கல்

தினகரன்  தினகரன்
மத்திய அரசின் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட 7 நிறுவனங்கள் விருப்ப விண்ணப்பம் தாக்கல்

டெல்லி: மத்திய அரசு விஸ்டா திட்டத்தின் கீழ் எழுப்ப உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு விருப்பம் தெரிவித்து 7 நிறுவனங்கள் மத்திய அரசிடம் தகுதி மற்றும் விருப்ப விண்ணபங்களைத் தாக்கல் செய்துள்ளன. அதில் உத்தரப்பிரதேச அரசின் ராஜ்கியா நிர்மான் நிகம் லிமிடெட், டாடா புராஜெக்ட்ஸ், லார்ஸன் அன்ட் டூப்ரோ லிமிட், ஐடிடி சிமென்ட்டேஷன் லிமிட், என்சிசி லிமிட், ஷாபூர்ஜி பலோன்ஜி அன்ட் கோ பிரைவேட் லிமிட், மற்றும் பிஎஸ்பி புரோஜெக்ட்ஸ் ஆகியவை விருப்ப மனுக்கள் அளித்துள்ளன.\r இப்போதைய நாடாளுமன்றம் 93 ஆண்டுகள் பழமையானது. இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாகும். இந்த கட்டிடத்தை இடிக்காமல் பழைய கட்டிடத்தை ஒட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது. தரைத்தளம் மட்டும் 16,921 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது.\r இதற்காக மத்திய விஸ்டா திட்டத்தை மத்திய உருவாக்கியுள்ளது. புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.889 கோடியாகும். முக்கோண வடிவத்தில் 42 மீட்டர் உயரம் கொண்ட புதிய கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கட்டப்படும். நீண்டகாலமாக கிடப்பில் இருந்த இத்திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. இந்த புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தை செயல்படுத்தும் தகுதியான நிறுவனங்களிடம் மத்திய அரசின் பொதுப்பணித்துறை விருப்ப மனுக்களைக் கோரி இருந்தது. அந்த வகையில் 7 நிறுவனங்கள் விருப்பத் தகுதி மனுக்களை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\r இந்த திட்டம் தொடங்கப்பட்டால் அடுத்த 21 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை 2024-ம் ஆண்டு திறப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடம் அருகேயே புதிய கட்டிடம் முக்கோண வடிவில் கட்டப்படும். கூட்டு கூட்டம் நடத்துவதற்கு அதிகபட்சமாக 1350 உறுப்பினர்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்படுகிறது.

மூலக்கதை