ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

தினகரன்  தினகரன்
ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு  நேற்று கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய உற்சவங்களுக்கு முன் வரும் செவ்வாய்கிழமைகளில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்ைம பணி) நடப்பது வழக்கம். அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வரவு, செலவு கணக்குகள் சுவாமியிடம் சமர்ப்பிக்கும் ஆனிவார ஆஸ்தானம் நாளை (16ம் தேதி) நடக்கிறது. 1956ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தொடங்கிய பின் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் கோயில் கணக்கு முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 1ம்தேதி முதல் புதிய கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது. அதன்படி சம்பிரதாய முறைப்படி ஏழுமலையான் கோயிலில் ஆடி மாதம் முதல் நாள் வரவு, செலவு கணக்குகள் சுவாமி முன் படிக்கப்படும். பின்னர், சுவாமிக்கு புதிய பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்படும். இந்த சேவையில் கலந்து கொள்ளும் பக்தர்களிடமிருந்து தலா 1 பெறப்பட்டு புதிய ஆண்டிற்கான கணக்கு தொடங்கப்படும். அதன்படி நாளை (16ம் தேதி) ஆனி வார ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நேற்று காலை 6 மணி முதல் 8.30 மணி வரை ஏழுமலையான் கோயில் மூலவர் மீது பட்டு வஸ்திரம் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கல் மண்டபங்கள், தங்க கொடிமரம் உள்ளிட்ட அனைத்து இடங்களும், தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், கற்பூரம், மூலிகை திரவியங்கள் கொண்ட கலவையை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவர் மீது சாத்தப்பட்ட பட்டு வஸ்திரம் அகற்றி சிறப்பு பூஜை செய்யப்பட்டு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து காலை 9 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் செயல் அலுவலர்  அனில்குமார் சிங்கால், கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி,  முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத் ஜட்டி, துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.இதைத்தொடர்ந்து ஆனிவார ஆஸ்தானம் நடைபெறும் நாளை திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் தமிழக அரசு சார்பில் எடுத்து வந்து சுவாமிக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

மூலக்கதை