வெளிநாட்டு மாணவர் வெளியேற்றம் எதிர்த்து அமெரிக்க மாகாணங்கள் வழக்கு

தினமலர்  தினமலர்
வெளிநாட்டு மாணவர் வெளியேற்றம் எதிர்த்து அமெரிக்க மாகாணங்கள் வழக்கு

வாஷிங்டன் : 'ஆன்லைன்' மூலமாக மட்டும் நடத்தப்படும் பாடங்களை படிக்கும் வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்றும் புதிய உத்தரவை எதிர்த்து, அமெரிக்காவின், 17 மாகாணங்கள் மற்றும் கொலம்பியா மாவட்டம் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவில், 'விசா' முறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.

அபாயம் :


வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கு வழங்கப்படும், எச்1பி விசா உள்ளிட்ட வேலைக்கான விசாக்கள் கட்டுப்படுத்தப்பட்டன. அதேபோல், 'கிரீன் கார்டு' எனப்படும், நிரந்தர குடியுரிமை வழங்குவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பல்கலை., மற்றும் கல்லுாரிகளில் படிக்கும் வெளிநாட்டு மாணவர் களுக்கான விசா முறையிலும் புதிய நடைமுறையை, அதிபர், டொனால்டு டிரம்ப் அரசு சமீபத்தில் அறிமுகம் செய்தது.


அதன்படி, 'முழுதும், ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் பாடங்களை படிக்கும் மாணவர்கள், அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது அவர்கள் கட்டாயமாக வெளியேற்றப் படுவர்' என, அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்கத் துறை சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.இதன் மூலம், எப் - 1 மற்றும் எம் - 1 விசா பெற்றுள்ள, இந்தியா உட்பட, பல நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இவர்கள் சொந்த நாடு திரும்ப முடியாத சூழ்நிலையும் இருக்கிறது.அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, ஹார்வர்டு பல்கலைக் கழகம் மற்றும் மசாசூட்டஸ் தொழில்நுட்ப மையம் ஆகியவை வழக்கு தொடர்ந்தன. அதைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள, 50 மாகாணங்களில், 17 மாகாணங்கள் மற்றும் கொலம்பியா மாவட்டம் சார்பில், நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

கொடூரம் : இந்த மாகாணங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, மார்ச், 13ல் அரசு வெளியிட்ட உத்தரவின்படி, கொரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ளதால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது, அந்த உத்தரவை மீறுவதாக, புதிய உத்தரவு உள்ளது.வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில், அரசின் உத்தரவு மிகவும் கொடூரமானதாகவும், சட்டவிரோதமாகவும் உள்ளது. நம் நாட்டின் கல்வி மையங்கள், சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு, வெளிநாட்டு மாணவர்கள் பெரும் பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

இங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், பல்வேறு துறைகளில், நாட்டின் அறிவு வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளனர். அதனால், வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்றும் உத்தரவு செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளன. கொலரானோ, கனெக்டிகட், டெலவாரே, இலியோனிஸ், மேரிலேண்ட், மசாசூட்டஸ், மிச்சிகன், நவேடா, நியூஜெர்சி, விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களில் இந்த வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

நிறுவனங்களும் வழக்குஅரசின், 'விசா' உத்தரவை எதிர்த்து, 'கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட்' உட்பட, 12க்கும் மேற்பட்ட, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களும், நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளன.'அரசின் உத்தரவால், திறமையுள்ள வெளிநாட்டு மாணவர்களை, எங்களுடைய நிறுவனங்களில் பணியமர்த்தும் திட்டம் பாதிக்கப்படும். அதனால், உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை