முடிவு!சோலார் மின்நிலையம் அமைப்பதற்காக விவசாயிகளிடம் பெறப்படும் நிலத்திற்கு உத்தரவாதம்

தினமலர்  தினமலர்
முடிவு!சோலார் மின்நிலையம் அமைப்பதற்காக விவசாயிகளிடம் பெறப்படும் நிலத்திற்கு உத்தரவாதம்

திருப்பூர்;சோலார் மின்நிலையம் அமைப்பதற்காக விவசாயிகளிடம் பெறப்படும் நிலத்திற்கு உத்தரவாதம் வழங்கப்படும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், முதல்கட்டமாக, சூரிய சக்தியால் இயங்கும் 26 பம்ப் செட்டுகள் பெறப்பட்டுள்ளது. அவ்வகையில், விவசாயிகள், 30க்கு, 40 அடி என்ற அளவில், தங்கள் நிலத்தை மின் வாரியத்திடம் ஒப்படைத்தால், அங்கு, பத்து கிலோ வாட் திறன் கொண்ட சோலார் மின் நிலையம் அமைக்கப்படும்.
இதனால், அதிகபட்சம், 7.50 எச்.பி., கொண்ட மோட்டார்களை, இயக்க முடியும். இதற்காகும் செலவில், மத்திய அரசு, 40 சதவீதமும், மாநில அரசு, 30 சதவீதமும் வழங்கும். மீதமுள்ள தொகை, வங்கிக்கடன் மூலம் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.ஆனால், இத்திட்டத்தில் இணைய விவசாயிகள் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். மின்வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் நிலம், பறிபோய் விடுமோ என்ற அச்சம் அவர்கள் இடையே எழுந்துள்ளது.
திருப்பூர் மின் பகிர்மான வட்ட, மேற்பார்வை பொறியாளர் ஜவஹர் கூறுகையில், ''சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட் அமைக்கப்பட்டால், விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைக்கும்.பயன்படுத்தியது போக, எஞ்சிய மின்சாரத்தை, வாரியம் விலைக்கு வாங்கிக் கொள்ளும். விவசாயிகளிடம் பெறப்படும் நிலத்துக்கு எவ்வகையில் பாதிப்பு ஏற்படாது. இதற்காக உத்தரவாதம் வழங்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது,'' என்றார்.

மூலக்கதை