கொரோனா இருக்கு; உள்ளே வராதே! ஆபத்தை சொல்லும் 'ஆப்':மாநகராட்சி இன்று அறிமுகம்

தினமலர்  தினமலர்
கொரோனா இருக்கு; உள்ளே வராதே! ஆபத்தை சொல்லும் ஆப்:மாநகராட்சி இன்று அறிமுகம்

கோவை:'கொரோனா' நோய் பரவியுள்ள பகுதி, தனிமைப்படுத்திய பகுதி உள்ளிட்ட விவரங்களை, ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ளும் வகையில், 'கோவை கேர்' எனும் மொபைல் செயலியை, மாநகராட்சி நிர்வாகம், இன்று காலை 11:00 மணிக்கு அறிமுகப்படுத்துகிறது.
கோவையில், 'கொரோனா' தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அப்பகுதி மக்கள், 14 நாட்கள் வெளியே வரக்கூடாது என்றாலும், எச்சரிக்கையை மீறி வருகின்றனர்.அவர்களை கண்காணிக்கவும், தொற்று நிலவரங்களை அறியவும், அப்பகுதிக்கு வெளிநபர்கள் செல்லாமல் இருக்கவும், மருத்துவ வசதி விபரங்களை தெரிந்து கொள்வதற்காகவும், 'கோவை கேர்' என்கிற புதிய மொபைல் செயலியை, மாநகராட்சி உருவாக்கியுள்ளது.இது தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் கூறியதாவது:கோவை மாநகர மக்களுக்காக, கல்லுாரி மாணவர்களான கிருபாசங்கர், அஜய்தாரூக், சரண்ராபின்சன், விஷ்ணுபிரசாத் கினி ஆகியோரது முயற்சியில், இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.அதில், மாநகராட்சியின் அன்றாட செயல்பாடுகள் இடம் பெற்றிருக்கும். தனிமைப்படுத்தியவர்கள் வசிக்கும் பகுதி அடையாளம் செய்யப்பட்டிருக்கும்; அங்கு வசிப்பவர்கள், 'ஜியோ டேக்' முறையில் கண்காணிக்கப்படுவர். வீட்டை விட்டு வெளியே வந்தால், தகவல் வந்து விடும்.அதேபோல், தனிமைப்படுத்திய பகுதியில் வசிப்பவர்கள், எல்லையை தாண்டினால், அவர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி செல்லும்; மாநகராட்சி அதிகாரிகளுக்கும், 'அலர்ட்' செய்தி வரும்.புதிய நபர்களுக்கும் எச்சரிக்கைவேறொரு இடத்தில் இருந்து, பணி நிமித்தமாக செல்வோர், நோய் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் தெரியாமல் செல்ல முற்பட்டால், அவரது மொபைல் போனில், (செயலி பதிவிறக்கம் செய்திருந்தால்), எச்சரிக்கை 'மெசேஜ்' செல்லும்.
கோவையில், எங்கெங்கு நோய் தொற்று பரவி இருக்கிறது; தனிமைப்படுத்தியுள்ள பகுதிகள் எவை; மருத்துவ பரிசோதனை எங்கெங்கு நடக்கிறது; மாநகராட்சி மருத்துவமனை தொலைபேசி எண்கள், மெடிக்கல் ஷாப் விவரங்களை அறியலாம். பொது கழிப்பிட வசதி இருக்குமிடங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் இருந்தபடி, மருந்து மற்றும் காய்கறி வாங்கும் வசதியும் செய்யப்படும்.நாளை (இன்று) காலை, 11:00 மணிக்கு, ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கத்தில், கலெக்டர் ராஜாமணி முன்னிலையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி அறிமுகப்படுத்துகிறார். இச்செயலி, கோவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, கமிஷனர் கூறினார்.அச்சுறுத்தல் பகுதிகள் எவை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர் வசிக்கும் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, அனைத்து விதமான கடைகளும் மூடப்படுகிறது.
மளிகை, மருந்து, பால் வியாபாரிகளுக்கு தொலைபேசி வாயிலாக, ஆர்டர் கொடுக்க வேண்டும். அவற்றை பெற்றுக் கொடுக்க, மாநகராட்சி சார்பில், காலை, 6:00 முதல் மதியம், 2:00 வரை; மதியம், 2:00 முதல் இரவு, 10:00 வரை, இரு ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். சலீவன் வீதி, செட்டி வீதி, தெலுங்குபாளையம், நகைப்பட்டறைகள் போன்ற மக்கள் நெருக்கமாக வசிக்கும் இடங்கள், அச்சுறுத்தல் பகுதியாக பட்டியலிடப்பட்டுள்ளன. இங்கு மளிகை, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், 10:00 மணி வரை மட்டும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்பகுதியில் வசிப்பவர்கள், அங்குள்ள ஊழியர்களிடம் தகவல் தெரிவித்து விட்டு, வெளியே சென்று வரலாம். வெளிநபர்கள், அப்பகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கமிஷனர் ஷ்ரவன் குமார் தெரிவித்தார்.

மூலக்கதை