திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ‘பி’ அறை திறக்கப்படுமா?... உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து புதிய எதிர்பார்ப்பு

தினகரன்  தினகரன்
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ‘பி’ அறை திறக்கப்படுமா?... உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து புதிய எதிர்பார்ப்பு

திருவனந்தபுரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் ‘பி’ ரகசிய அறை திறக்கப்படுமா என்ற புதிய ஆவல் அனைவரிடமும் எழுந்துள்ளது. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் நிர்வாக உரிமை மன்னர் குடும்பத்துக்ேக சொந்தம் என உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இது திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மன்னர் குடும்பத்தை சேர்ந்த கவுரி லட்சுமிபாய் கூறுகையில், ‘‘இது எங்கள் குடும்பத்துக்கு கிடைத்த வெற்றியல்ல; பத்மநாப சுவாமியின் பக்தர்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி’’ என கூறினார். கோயில் நிர்வாக உரிமையை மன்னர் குடும்பத்துக்கு அளித்த உச்சநீதிமன்றம், திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட நிர்வாகக்குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த கோயிலில் உள்ள 6 ரகசிய  அறைகளையும் திறந்து பரிசோதிக்க கடந்த 2011ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக கேரள உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் ‘பி’ அறையை எந்த காரணம் கொண்டும் திறக்கக்கூடாது. மீறி திறந்தால் நாட்டுக்கு ஆபத்து என கூறி மன்னர் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து ‘பி’ அறையை தவிர மற்ற அறைகளை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் ஒவ்வொரு அறையிலும் விலை மதிக்க முடியாத நகைகள் உட்பட பொக்கிஷங்கள் குவிந்து கிடந்தன. இதைவிட பலமடங்கு பொக்கிஷங்கள் ‘பி’ அறையில் இருக்கலாம் என கூறப்படுகிறது. ‘பி’ அறை பல நூற்றாண்டுகளாக திறக்கப்படவில்லை என மன்னர் குடும்பத்தினர் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் இந்த அறை இதற்குமுன்பு 2 முறை திறக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு வக்கீல் (அமிக்கஸ் கியூரி) கோபால் சுப்ரமணியம் தெரிவித்தார். இதையடுத்து ‘பி’ அறையை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மன்னர் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பத்மனாப சுவாமியின் மூல விக்ரகம் அமைந்துள்ள கருவறையின் நேர்கீழேதான் இந்த ‘பி’ அறை இருப்பதாகவும், அதை திறந்தால் மூல விக்ரகத்துக்கு சேதம் ஏற்படும் எனவும் மன்னர் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த அறைக்குள் 2 உள் அறைகள் உள்ளன. இவற்றுக்கு கருங்கல்லால் ஆன கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் அறை மட்டுமே முன்னர் திறக்கப்பட்டது எனவும், அதற்கு பின்னால் உள்ள 2வது அறைதான் மிகவும் முக்கியமானது எனவும் மன்னர் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதை திறப்பது மிகவும் சிரமமான காரியம். சக்தி வாய்ந்த இயந்திரங்களை பயன்படுத்திதான் திறக்க முடியும். அப்போது கோயிலுக்கும் சேதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனவும் மன்னர் குடும்பம் தெரிவித்தது. இதையடுத்து ‘பி’ அறையை திறக்கும் முடிவை உச்சநீதிமன்றம் தள்ளிவைத்தது. இதையடுத்து நேற்றுவரை இந்த அறையை திறப்பது குறித்து உச்சநீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. ஆனால் நேற்றைய உத்தரவில் ‘பி’ அறையை திறப்பது குறித்து தற்போது அமைக்கப்படவுள்ள மாவட்ட நீதிபதி தலைமையிலான 5 பேர் குழு தீர்மானிக்கலாம் என தெரிவித்திருந்தது. இதையடுத்து ஏராளமான ரகசியங்கள் புதைந்துள்ள ‘பி’ அறை திறக்கப்படுமா என்ற ஆவல் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால் கோயிலின் நிர்வாக பொறுப்பு மன்னர் குடும்பத்துக்கே திரும்ப கிடைத்துள்ளதால், அவர்களது எதிர்ப்பை மீறி ‘பி’ அறையை திறக்க குழு நடவடிக்கை எடுப்பது சந்தேகமே.மலைக்க வைத்த நகைகளின் மதிப்பு பத்மநாபசுவாமி கோயிலில் ‘ஏ’ முதல் ‘எப்’ வரை பெயரிடப்பட்ட 6 ரகசிய அறைகள் உள்ளன. இந்த அறைகளை திறந்து பரிசோதிக்க 2011ம் ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் நியமித்த உயர்மட்ட குழுவினர் அனைத்து அறைகளையும் திறக்க முடிவு செய்தனர். இதன்படி ஏ, பி அறைகள் நீங்கலாக மற்ற 4 அறைகள் திறக்கப்பட்டன. 2 அறைகளில் கோயில் விழாக்களுக்கு பயன்படுத்தும் நகைகள் இருந்தன. பின்னர் ‘ஏ’ அறை திறக்கப்பட்டது. இதில்தான் விலை மதிக்க முடியாத வைரம், வைடூரியம், தங்க நகைகள், பொருட்கள் காணப்பட்டன. 18 அடி நீளம் உள்ள 4 தங்க மாலைகள் காணப்பட்டன. ஒவ்வொன்றும் 2.2 கிலோ எடை இருந்தன. மேலும் ஆயிரக்கணக்கான தங்க செயின்கள், ரத்தினங்கள் பதித்த தங்க மாலைகள், நூற்றுக்கணக்கான தங்க கயிறுகள், தங்க கட்டிகள், தங்க சங்கிலிகள், தங்க சிலைகள், சாக்கு நிறைய நெல் மணி வடிவிலான தங்கம். தங்க செங்கோல்கள், ஒரு சாக்கில் பெல்ஜியம் ரத்தினங்கள், மாணிக்கம், மரகதம், நூற்றுக்கணக்கான வைர கற்கள், 20 லட்சத்திற்கு மேற்பட்ட தங்க நாணயங்கள் என குவிந்து கிடந்தன. இந்த ஒரு அறையில் மட்டும் ஒரு லட்சம் கோடிக்கு மேல் மதிப்பிலான பொருட்கள் இருக்கும் என தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. பல நகைகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவை என்பதால் அவற்றின் மதிப்பை கண்டறிவது சிரமம் என கூறப்படுகிறது. ஆனால் இந்த அறையில் இருப்பதை விட ‘பி’ அறையில் பல மடங்கு பொக்கிஷங்கள் இருக்கலாம் என கருதப்படுகிறது. தீர்ப்பு வரவேற்கத்தக்கது கேரள தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், பத்மநாபசுவாமி கோயிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரே நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை கேரள அரசு வரவேற்கிறது. இதை கேரள அரசு அமல்டுத்தும் என்றார்.

மூலக்கதை