'பிரிட்டனில் குளிர்காலத்தில் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கக்கூடும்': ஆய்வாளர்கள் எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
பிரிட்டனில் குளிர்காலத்தில் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கக்கூடும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

லண்டன்: 'பிரிட்டனில் இந்த ஆண்டு இறுதியில் துவங்கவுள்ள குளிர்கால மாதங்களில் மட்டும், கொரோனா தொற்றால், 1.2 லட்சம் பேர் உயிரிழக்கூடும்' என, சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.பிரிட்டனில் இதுவரை, 2.90 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது; 44,830 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பிரிட்டனின் அகாடமி ஆப் மெடிக்கல் சயின்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை அடிப்படையிலும், இறப்பு விகிதத்தின் அடிப்படையிலும் பிரிட்டன் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் வர இருக்கும் குளிர்கால மாதங்களில், வைரஸ் பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கக்கூடும். இறப்பு எண்ணிக்கையும் தற்போது இருப்பதைவிட இரு மடங்கு அதிகமாகும்.
வரும் செப்., முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரையிலான ஒன்பது மாதங்களில், 1.2 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழக்கூடும்.
இவ்வாறு அதில் எச்சரிக்கை விடுத்துள்ளது.


அறிக்கையைத் தயாரித்தவர்களில் ஒருவரான பேராசிரியர் ஸ்டீபன் ஹோல்கேட் தெரிவித்துள்ளதாவது:கொரோனாவின் இரண்டாம் கட்டப்பரவலை பிரிட்டன் எதிர்கொண்டு வருகிறது. இது அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். குறிப்பாக, குளிர்காலத்தில் மக்கள் ஒரே இடத்தில் அடைந்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்போது கொரோனா தொற்று உச்சத்தை தொடும்.


முறையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டால் மட்டுமே, இரண்டாம் கட்டப் பாதிப்பை, மிகக்குறைந்த அளவாவது தடுக்க முடியும். மேலும் தொற்று அதிகரிக்கும்போது மருத்துவமனைகள் நிரம்பி விடுவதற்கான அபாயம் உள்ளது. தற்போதே அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.இவ்வாறு அவர் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை