இந்த பக்கம் பாதி; அந்த பக்கம் பாதி மனதை பிரிக்காத எல்லைகள்: இந்திய - நேபாள உறவுக்கு சாட்சியாக விளங்கும் சிவான் கிராமம்

தினகரன்  தினகரன்
இந்த பக்கம் பாதி; அந்த பக்கம் பாதி மனதை பிரிக்காத எல்லைகள்: இந்திய  நேபாள உறவுக்கு சாட்சியாக விளங்கும் சிவான் கிராமம்

ரக்சால்: கடந்த சில நாட்களாக இந்தியா-நேபாளம் இடையே எல்லை பிரச்னை ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகளான லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகியவை தனது நாட்டிற்கு சொந்தமானது என, புதிய அரசியல் வரைபடத்தை நேபாளம் வெளியிட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் தூண்டுதல் காரணமாக, நேபாள பிரதமர் சர்மா ஒலி இந்த பிரச்னைகளை கிளப்பி வருகிறார். இதன் காரணமாக இருநாட்டுக்கும் இடையேயான நல்லுறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எல்லை சார்ந்த பிரச்னை இருநாடுகள் இடையே நிலவி வந்தாலும், இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே ஆழமான உறவு வேரூன்றி இருந்ததற்கான சாட்சியாக இருநாட்டு எல்லையில் இருக்கும் சிவான் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பாதி பகுதி இந்திய எல்லைக்குள்ளும், மீதி பாதி பகுதி  நேபாள எல்லைக்குள்ளும் உள்ளன. இருநாட்டு அரசுகளும்  எல்லை பிரச்னையை பேசிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த மக்கள் எவ்வித வேறுபாடும் இன்றி ஒற்றுமையாகவே இருந்து வருகின்றனர். பீகார் மாநிலத்தின் ரக்சால் அருகே அமைந்துள்ள சிவான் கிராமமானது, பான்டோகா பஞ்சாயத்தின் கீழ் வருகிறது. இந்த இடம் யாருடைய கட்டுப்பாட்டின் கீழும் வரவில்லை. இந்த கிராமம், இரு நாட்டினாலும் கைவிடப்பட்ட  அல்லது புறக்கணிக்கப்பட்டதற்கு சாட்சியாக உள்ளது. இந்த கிராமத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய தூண், நேபாள நாட்டின் எல்லை தொடக்கத்தை குறிக்கிறது. ஒரே ஒரு சாலையானது இந்த கிராமத்திற்கு அழைத்து செல்லும் வழியை காட்டுகிறது. இரு பக்கமும் உள்ள அதிகாரிகள் கூட இந்த கிராமத்தை குறித்து அக்கறை செலுத்த தவறிவிட்டதை இந்த சாலையே எடுத்துக் காட்டுகிறது. கிராமமானது இரண்டு தனித்தனி பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பக்கம் உள்ளது சிவான் டோலா. நேபாள பக்கம் உள்ள கிராமமானது அலவுன் டோலாவாகும். இந்திய பகுதியை சேர்ந்தவர்கள் அலவுன் டோலாவில் கடைகளை அமைத்துள்ளனர். அலவுன் டோலாவில்  அனுமன் கோயில் அமைந்துள்ளது. இதற்கு இந்திய பகுதியில் இருந்து மக்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். இரு பகுதியை சேர்ந்தவர்களும் இணைந்து மத விழாக்களையும் திருமணங்களையும் நடத்துகின்றனர். அதேபோல், இருபகுதியில் இருக்கும் முதியோர்கள் மாலை நேரத்தில் கோயில் திண்ணைகளில் அமர்ந்து பேசி மகிழ்ந்து பொழுதை கழிக்கின்றனர். சிவான் டோலாவில் அமைந்துள்ள ஆரம்பப் பள்ளிக்கு அலவுன் டோலாவில் இருந்து அதிக அளவிலான மாணவர்கள் வந்து கல்வி பயின்று செல்கின்றனர். அதேபோல், அலவுன் டோலாவில் அமைந்துள்ள தனியார் பள்ளியும் இந்திய பக்கத்தில் இருந்து ஏராளமான மாணவர்களை கொண்டு இயங்கி வருகின்றது. இங்கிருந்து சிவான் டோலாவிற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்திய பகுதிகளில் வசிப்பவர்களின் பெரும்பாலான உறவினர்கள் நேபாள பகுதியில் வசிக்கின்றனர். அது அவர்களுக்கு எப்போதும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது இல்லை. கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் கூறுகையில், “எங்கள் கிராமம் புறக்கணிப்புக்கு மத்தியில் உள்ளது. ஒருவரும் இந்த கிராமத்தின் வளர்ச்சி குறித்து கவலைப்பட்டது கிடையாது. இந்திய அரசாங்கமோ, நேபாள அரசாங்கமோ இந்த கிராமத்தை குறித்து அக்கறை காட்டியதில்லை. இது யாருடைய நிலப்பகுதியும் இல்லை என்பதையே காட்டுகின்றது. நேபாள ஆயுத படை வீரர்கள் தேவையின்றி மக்களை தடுத்து துன்புறுத்துகின்றனர். எல்லையை தாண்ட வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர். ஆனால், எல்லை எங்கே உள்ளது? இந்த வேறுபாட்டை இதுவரை நாங்கள் புரிந்து கொள்ளவில்லை,” என்றார். இந்த கிராமத்தில் இருக்கும் பாதி பேர் இந்தியாவில் தேர்தல் நடைபெறும்போது வாக்களிக்கின்றனர். பாதி பேர் நேபாள தேர்தலில் வாக்களிக்கின்றனர். பல்வேறு அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும் அது ஒரு போதும் மக்கள் மனதில் வேறுபாட்டை ஏற்படுத்தவில்லை. சண்டை, சச்சரவுகளை உருவாக்கவில்லை. ஆனால், அண்மையில் நேபாளம் ஏற்படுத்திய சட்ட திருத்தமானது இரு நாடுகளுக்குமான உறவு மோசமடைந்து வருவதை காட்டுவதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இ்ந்த கிராம மக்கள் இருநாட்டு எல்லை என்பதை இதுவரை உணராமல் இணக்கத்தோடு வாழ்ந்து வருவதைப்போல், இருநாடுகளும் தங்கள் வேறுபாடுகளை மறந்து சுமூக உறவை மேற்கொள்ளவும், பழைய உறவை மீட்டெடுக்கவும் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். * 2% பகுதியால் முறியும் உறவுஇந்தியா, நேபாளம் இடையே 1880 கி.மீ. தூர எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இதில் 98 சதவீதம் எல்லைப்பகுதி வரையறுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களான லிபுலேக், காலாபானி, லிம்பியதூரா பகுதிகள் சர்ச்சைக்குரிய இடங்களாக இருந்த வருகின்றன. இவை மூன்று பகுதிகளும் சேர்த்து 370 சதுர கி.மீ. இருக்கும் என கூறப்படுகிறது.* திருமண பந்தமும் முறிகிறதுஅலவுன் டோலாவில் வசிப்போரை திருமணம் செய்து கொண்டு சென்ற சிவான் டோலா பெண்களுக்கு, கடந்த 7 ஆண்டுகளாக நேபாளத்தில் குடியுரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்திய பகுதியில் இருப்பவர்கள் தங்கள் பெண்களை அலவுன் டோலா பகுதியில் திருமணம் செய்து கொடுப்பதற்கு தற்போது அச்சம் அடைந்துள்ளனர்.* வீடு அங்கே; தொழுவம் இங்கேநேபாளத்தை சேர்ந்தவர்கள் அமன் படேல், சம்பல் படேல். இந்த சகோதரர்கள் இருவரும் அலவுன் டோலாவில் வீடுகளை கட்டினர். விவசாய பகுதி அலவுன் டோலாவிலும், மாட்டு தொழுவம் இந்திய பகுதியான சிவான் டோலாவில் உள்ளது. நேபாளத்தில் டிராக்டர் விலை அதிகம் என்பதால் விவசாயம் செய்வதற்காக இந்தியாவில் டிராக்டரை வாங்குகின்றனர். இவை மாட்டு தொழுவத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது.

மூலக்கதை