பிரபல கால்பந்து வீரரின் சகோதரர் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
பிரபல கால்பந்து வீரரின் சகோதரர் சுட்டுக்கொலை

இங்லிஷ் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடும் முக்கிய அணிகளில் ஒன்று டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர். அதன் முக்கிய தற்காப்பு ஆட்டக்காரர் செர்ஜ் அவுரியர் (27). ஐவரிகோஸ்ட் நாட்டின் தேசிய கால்பந்து அணியின் கேப்டனாக இருக்கிறார். அவரது குடும்பம் செர்ஜ் சிறுவனாக இருக்கும் போதே ஐவரிகோஸ்டில் இருந்து பிரான்சுக்கு குடிபெயர்ந்தது. சிறந்த கால்பந்து வீரரான செர்ஜ் சிறுவயது முதலே பிரான்ஸ் நாட்டின் கால்பந்து கிளப்களுக்காக விளயைாடி வந்தார். கடந்த 2017ம் ஆண்டு முதல் இங்கிலாந்து கால்பந்து கிளப்பான டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பருக்காக விளையாடி வருகிறார்.அவரது இளைய சகோதரர்  கிறிஸ்டோபர் அவரியரும் (26) ஒரு கால்பந்து வீரர் தான். உள்ளூரை சேர்ந்த ஆர்சி லென்ஸ் கிளப்புக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 5 மணி அளவில் ஒரு இரவு விடுதிக்கு வெளியே கிறிஸ்டோபர் பிணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை ஆய்வு செய்ததில் அவர் அடிவயிற்றில் குண்டு பாய்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கிறிஸ்டோபரை சுட்டுவிட்டு தப்பியோடிய மர்மநபரை தேடி வரும் பிரெஞ்ச் போலீசார், கொலைக்கான காரணங்களையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் செர்ஜ் சகோதரர் கிறிஸ்டோபர் மறைவுக்கு, டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் கிளப் இரங்கல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை