வெளிநாட்டு மாணவர்கள் விசா ரத்து சர்ச்சை டிரம்ப் உத்தரவை எதிர்த்து 17 மாகாண அரசுகள் வழக்கு

தினகரன்  தினகரன்
வெளிநாட்டு மாணவர்கள் விசா ரத்து சர்ச்சை டிரம்ப் உத்தரவை எதிர்த்து 17 மாகாண அரசுகள் வழக்கு

வாஷிங்டன்: ஆன்லைன் வகுப்பில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ரத்து செய்யக்கோரும் அதிபர் டிரம்ப் உத்தரவை எதிர்த்து 17 மாகாணங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. அமெரிக்காவில் ஆன் லைன் வகுப்புகளுக்கு மாறும் வெளிநாட்டு மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இது, வெளிநாட்டு மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த உத்தரவால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கும் நிலை உருவாகி இருக்கிறது. அமெரிக்காவை விட்டு வெளியேறி சொந்த நாடுகளுக்கு சென்றால் அவர்கள் கல்வி கற்பதில் இடையூறு ஏற்படும் அச்சம் நிலவி வருகின்றது.இதற்கிடையே, டிரம்ப்பின் அறிவிப்புக்கு எதிராக பல்வேறு பல்கலைக் கழகங்களும், பல மாகாணங்களும் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளன. கடந்த வாரம் பிரபல ஹார்வர்டு பல்கலைக் கழகம் மற்றும் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவை, டிரம்ப் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தன. இதேபோல், டிரம்ப் முடிவை எதிர்ப்பு தெரிவித்து 17 மாகாண அரசுகளும், நூற்றுக்கணக்கான பல்கலைக் கழகங்களும் வழக்கு தொடர்ந்துள்ளன. வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாசசூசெட்ஸ் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. ‘அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, பல்கலைக் கழகங்களை பழிவாங்கும் செயல. இது, கல்வி நிறுவனங்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்துவதோடு, சிறந்த வெளிநாட்டு மாணவர்களையும் பல்கலைக் கழகங்கள் இழக்க நேரிடும்,’ என்றும் மாநிலங்கள் தெரிவித்துள்ளன. வரும் நவம்பரில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த வழக்குகள் தொடரப்பட்டு இருப்பது, டிரம்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

மூலக்கதை