கொரோனா தடுப்பில் தவறான பாதை: உலக சுகாதார அமைப்பு குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
கொரோனா தடுப்பில் தவறான பாதை: உலக சுகாதார அமைப்பு குற்றச்சாட்டு

ஜெனீவா : ''கொரோனா தடுப்பு நடவடிக்கையில், பல நாடுகள், மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றன,'' என, உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல், டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர், அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில் நாடுகளை மறைமுகமாக சாடி, வெளியிட்டுள்ள அறிக்கை: பல நாடுகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், தங்கள் விருப்பம் போல செயல்படுகின்றன. இது தவறு. இத்தகைய தவறான அணுகுமுறைகள், பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தாது. கொரோனாவை தடுக்க இந்நாடுகள் தவறினால், இயல்பு நிலை திரும்புவது சாத்தியமில்லை.

கொரோனா வைரஸ் தான், பொதுமக்களின் முதல் எதிரி. ஆனால், பல நாடுகள் மற்றும் மக்களின் செயல்பாடுகள் அதை எதிர்கொள்ளும் விதத்தில் இல்லை. பல நாடுகள், கொரோனா பாதிப்பு குறையாத நிலையிலும், பள்ளிகளை திறக்கச் சொல்கின்றன.கடைகளைத் திறக்கவும், பொது இடங்களில் மக்கள் கூடவும் தடை விதிக்காமல் உள்ளன.

உலக நாடுகள், பொதுமக்களிடம் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தனி நபர்களும், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவில், நியூயார்க் உள்ளிட்ட பல மாகாணங்களில், கொரோனா பாதிப்பு குறையாத நிலையிலும், அதிபர் டிரம்ப், பள்ளிகளை திறக்க உத்தரவிட்டுள்ளார். தவறினால், பள்ளிகளுக்கு அரசு நிதியுதவி நிறுத்தப்படும் என, எச்சரித்துள்ளார். பிரிட்டன் அரசு அதிகாரிகள், சமீபகாலமாக, முக கவசம் அணிவது குறித்து, மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மூலக்கதை