மேற்கு வங்க அரசை நீக்க ஜனாதிபதியிடம் பா.ஜ., மனு

தினமலர்  தினமலர்
மேற்கு வங்க அரசை நீக்க ஜனாதிபதியிடம் பா.ஜ., மனு

புதுடில்லி : 'மேற்கு வங்க மாநிலத்தில், பா.ஜ., பிரமுகர், தேபேந்திர நாத் ரே மர்ம மரணம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். அரசியல் படுகொலை நடத்தும், திரிணமுல் காங்., ஆட்சியை கலைக்க வேண்டும்' என, ஜனாதிபதியிடம், பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. ஹேமதாபாத் தொகுதியின், எம்.எல்.ஏ.,வான தேபேந்திர நாத் ரே உடல், அவருடைய வீட்டுக்கு அருகே உள்ள ஒரு கடையில், துாக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பா.ஜ.,வில் இணைந்தார். ஆனால், எம்.எல்.ஏ., பதவியை, அவர் ராஜினாமா செய்யவில்லை.

இந்நிலையில், பா.ஜ., பொதுச் செயலர் கைலாஷ் விஜயவர்கியா, எம்.பி.,க்கள் ராஜு பிஸ்தா, ஸ்வபன் தாஸ் குப்தா உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, நேற்று சந்தித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: மேற்கு வங்கத்தில், அரசியல் கொலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மாற்றுக் கட்சியினர் மீது, திரிணமுல் காங்., தொடர்ந்து தாக்குதல் நடத்துவதோடு, கொலையும் செய்து வருகிறது. மூன்று ஆண்டுகளில், பா.ஜ.,வைச் சேர்ந்த, 105 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜனநாயகத்தை மீறி செயல்படும், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை கலைக்க வேண்டும் என, ஜனாதிபதியிடம் மனு கொடுத்துள்ளோம். தேபேந்திர நாத் ரே கொலை தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தற்கொலை தான்


தேபேந்திர நாத் ரேயின் பிரேத பரிசோதனை அறிக்கை, நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'துாக்கில் தொங்கியதால் தான் அவருடைய மரணம் ஏற்பட்டுள்ளது. அவருடைய உடலில் வேறு எந்த காயங்களும் இல்லை' எனக் கூறப்பட்டுள்ளது.ரேயின் சட்டை பையில், ஒரு கடிதம் இருந்ததாகவும், அதில், தன் தற்கொலைக்கு இரண்டு பேரின் பெயரை அவர் குறிப்பிட்டுள்ளதாகவும், போலீசார் கூறியுள்ளனர்.

ஆனால், ரே குடும்பத்தார், இதை மறுத்து வருகின்றனர். அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இந்நிலையில், ரே கடிதத்தில் குறிப்பிட்டிருந்த இரண்டு பெயர்களில் ஒருவரை போலீசார், நேற்று கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

மூலக்கதை