நேபாளத்தில் அரசியல் சிக்கல்

தினமலர்  தினமலர்

காத்மாண்டு : நேபாளத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் ஒலி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் செயல் தலைவர் பிரசண்டா ஆகியோர், நேற்று ஆலோசனை நடத்தினர்.

அண்டை நாடான நேபாளத்தில், பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடக்கிறது. அவர், கட்சி தலைவராகவும் இருக்கிறார்.

வலியுறுத்தல் :


கட்சியின் செயல் தலைவராக உள்ள முன்னாள் பிரதமர், பிரசண்டா தலைமையில், மற்றொரு கோஷ்டி செயல்படுகிறது.'சர்மா ஒலி, மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை; அதனால், அவர் பதவி விலக வேண்டும்' என, பிரசண்டா கோஷ்டியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, சர்மா ஒலி இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகிறார். குறிப்பாக, நேபாள அரசு, இந்தியாவுக்கு சொந்தமான லிபுலேக், காலாபானி, லிம்பியாதுரா பகுதிகளை சேர்த்து புதிய வரைபடம் வெளியிட்டது. இதை, பிரசண்டா ஆதரவாளர்கள் விரும்பவில்லை. இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, சர்மா ஒலி கூறுவதையும், அவர்கள் ஏற்கவில்லை.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகாரமிக்க, 45 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ள நிலைக் குழுவில், பெரும்பாலானோர் பிரசண்டா ஆதரவாளர்கள்.சர்மா ஒலியின் எதிர்காலத்தை நிர்ணயிக்க, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி நிலைக் குழு கூட்டம், நான்கு முறை ஒத்திவைக்கப் பட்டு, நாளை மறுநாள் நடக்க உள்ளது. இந்நிலையில், சர்மா ஒலி, நேற்று பிரசண்டாவை சந்தித்துப் பேசினார்.காத்மாண்டுவில் நடந்த இந்த சந்திப்பின் போது, கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் பற்றி, இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.

அனுமதிக்க மாட்டேன் :


கடந்த இரண்டு நாட்களுக்கு முன், சிட்வானில் நடந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் பேசிய பிரசண்டா, 'கட்சியை உடைக்கும் எந்த செயலையும், நான் அனுமதிக்க மாட்டேன். 'கொரோனாவுக்கு எதிராக நாடு போராடி வரும் நிலையில், அரசியல் குழப்பம் ஏற்படுவது நல்லதல்ல' என, கூறியிருந்தார்.

மூலக்கதை