'பரிசோதனைகள் அதிகம் செய்யப்படுவதால் அமெரிக்காவில் பாதிப்பு கூடுதலாக உள்ளது'

தினமலர்  தினமலர்

வாஷிங்டன் : ''இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளை விட, அமெரிக்காவில், 'கொரோனா' பரிசோதனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

எனவே தான், இங்கு பாதிப்பு எண்ணிக்கையும், அதிகமாக உள்ளது,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.அமெரிக்காவில், 33 லட்சத்துக்கும் மேற்பட்டோர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்; 1.35 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். புளோரிடா, டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியா மாகாணங்கள், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடுமையாக போராடி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், நேற்று கூறியதாவது:பல நாடுகளில், கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு மட்டுமே, கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

அதனால், அங்கெல்லாம் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது. அமெரிக்காவில், மிகப்பெரிய அளவில், பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை, 4.50 கோடி பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளில், இந்த அளவுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டால், அங்கு பாதிப்பு எண்ணிக்கை, அதிர்ச்சியூட்டுவதாக இருக்கும்.இத்தனை பேர் பாதிக்கப்பட்டாலும், அமெரிக்காவில் பலி விகிதம் மிக குறைவாகவே உள்ளது.

இந்த பெரும் தொற்றை, நாங்கள் மிக சிறப்பாகவே எதிர்கொண்டு வருகிறோம். தடுப்பூசி உருவாக்கும் பணி, முழு வீச்சில் நடந்து வருகிறது. விரைவில் நல்ல செய்தி வரும். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை