கோப்பை முக்கியம் கோஹ்லி * கங்குலி ‘அட்வைஸ்’ | ஜூலை 14, 2020

தினமலர்  தினமலர்
கோப்பை முக்கியம் கோஹ்லி * கங்குலி ‘அட்வைஸ்’ | ஜூலை 14, 2020

கோல்கட்டா: ‘‘ ஆஸ்திரேலிய தொடரில் நமது வீரர்கள் சிறப்பாக விளையாடினால் மட்டும் போதாது, இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டும்,’’ என கங்குலி தெரிவித்தார்.

இந்திய அணி வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்கிறது. இங்கு நான்கு போட்டிகள் கொண்ட ‘பார்டர்–கவாஸ்கர்’ டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் (டிச., 3–7) நடக்கவுள்ளது. அடிலெய்டு (டிச., 11–15), மெல்போர்ன் (டிச., 26–30), சிட்னியில் (2021, ஜன., 3–7) அடுத்த போட்டிகள் நடக்கவுள்ளன. 

கடந்த 2018ல் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை 2–1 என கைப்பற்றியது. இம்முறையும் இது போல சாதிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் கங்குலி உறுதியாக உள்ளார்.

இதுகுறித்து கேப்டன் கோஹ்லியிடம் பேசியுள்ளார். அப்போது கங்குலி கூறியது:

கோஹ்லி, உங்களிடம் சிறப்பான திறமை உள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் நீங்கள் தான் விளையாடப் போகிறீர்கள், உங்கள் அணி தான் திறமை வெளிப்படுத்தப் போகிறது. நான் இங்கிருந்து ‘டிவி’யில் தான் பார்க்கப் போகிறேன். 

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்களில் முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, ‘ஆல் ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா என எல்லோரும், ஆஸ்திரேலிய மண்ணில் களமிறங்கும் போது முழு உடற்தகுதியுடன் தான் இருப்பர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்திய அணியும் சிறப்பான முறையில் விளையாடினால் மட்டும் போதாது. போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பை வெல்ல வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை