இந்தியாவுடனான 'சாபஹார்' ரயில்வே திட்டத்தை ரத்து செய்தது ஈரான்

தினமலர்  தினமலர்
இந்தியாவுடனான சாபஹார் ரயில்வே திட்டத்தை ரத்து செய்தது ஈரான்

டெஹ்ரான்: இந்தியாவுடன் ஈரான் கையெழுத்திட்டிருந்த வரலாற்று சிறப்பு மிக்க, சாபஹார் ரயில்வே திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக, ஈரான் அறிவித்துள்ளது.

ஈரானில் உள்ள சாபஹார் துறைமுகம், இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்கு அருகாமையில் உள்ளது. குஜராத்தின் காண்ட்லா மற்றும் ஈரானின் சாபஹார் துறைமுகங்களின் துாரம், டில்லி - மும்பை துாரத்தை விடவும் குறைவானது. இந்த துறைமுகம் மேம்படுத்தப்பட்டால், பாகிஸ்தானை தவிர்த்து ஈரான் மற்றும் ஆப்கனுக்கு எளிதாக செல்ல முடியும்.

மற்ற ஆசிய நாடுகளுக்கும், ரஷ்யாவிற்கும் செல்ல வாய்ப்பு ஏற்படும். அந்த துறைமுகத்தில் தடையற்ற வர்த்தக மண்டலத்தை உருவாக்கி, அதன் மூலம் வர்த்தகத்தை மேம்படுத்த இந்தியா திட்டமிட்டிருந்தது. கடந்த 2016 மே மாதம், பிரதமர் மோடி ஈரான் சென்றிருந்த போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது.


இந்நிலையில், இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ஈரான் அறிவித்துள்ளது. திட்டத்தை துவங்க இந்தியா பணிகள் எதையும் செய்யவில்லை என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரானிடம் எண்ணெய் வாங்கக்கூடாது என்ற இந்தியாவின் முடிவும், ஈரான் மீது அமெரிக்க விதித்த பொருளாதார தடைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கம் காட்டியது ஈரானை மேலும் கோபப்படுத்தி உள்ளது. இதன் வெளிப்பாடாகவே, தற்போது சாபஹார் ரயில் திட்டத்தை மொத்தமாக நீக்க ஈரான் முடிவு செய்துள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

மூலக்கதை