தென் சீன கடல் விவகாரம்; முட்டிக்கொள்ளும் உலக நாடுகள்

தினமலர்  தினமலர்
தென் சீன கடல் விவகாரம்; முட்டிக்கொள்ளும் உலக நாடுகள்

வாஷிங்டன்: அமெரிக்கா சீனா இடையே கருத்து மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தென்சீனக் கடலில் அமெரிக்கா தொடர்ந்து அத்துமீறி வருவதாக முன்னதாக சீனா குற்றம் சாட்டி இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது பத்திரிகைக்கு பேட்டியளித்த அமெரிக்க மாநில செயலாளர் மைக் பாம்பியோ சீனாவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் எனத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒப்பந்தத்தை மீறி தென் சீன கடலில் சீனா ராணுவம் பயிற்சி மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா முன்னதாக குற்றம்சாட்டி இருந்தது. மறுபுறம் தென்கொரியா உடன் இணைந்து அமெரிக்க படைகள் தென்சீனக் கடலில் டாங்கர்கள் மற்றும் இதர போர்க் கப்பல்களை நிறுத்தி பயிற்சி எடுத்து வருவதாக சீனா குற்றம் சாட்டியது. இவ்வாறாக பல ஆண்டுகளாகவே தென்சீனக்கடலில் பதற்றம் மிக்க பகுதியாகவே இருந்து வருகிறது. தற்போது கொரோனாவை அடுத்து அந்த விவகாரம் சற்று ஓய்ந்து, மீண்டும் துவங்கியுள்ளது.

சீனா தனது ராணுவ பயிற்சிக்காக தென்சீனக் கடலை சர்வதேச ஒப்பந்தத்தை மீறி பயன்படுத்திக்கொள்வதை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளாது. அமெரிக்கா எப்போதுமே சர்வதேச கடல் ஒப்பந்தத்தை பின்பற்றி நடந்து கொள்ளும் தேசம். சீனா தனது அத்துமீறலுக்கு விரைவில் விளைவுகளை சந்திக்கும் என மைக் தெரிவித்துள்ளார்.

13 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட தென் சேனல் சீன கடற்பரப்பு காலகாலமாக ராணுவ மற்றும் கப்பற்படை பயிற்சி பகுதியாக விளங்குகிறது. தென்சீனக் கடலை சுற்றி பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேஷியா, தைவான் உள்ளிட்ட நாடுகள் சூழ்ந்துள்ளன. இத்தனை நாடுகளுக்கும் தென் சீன கடலில் பங்கு உண்டு என்ற போதிலும் 100 ஆண்டுகளுக்கு எங்களுக்குத்தான் சொந்தம் என சீனா மட்டுமே அந்த கடற்பரப்பை சொந்தம் கொண்டாடி வருகிறது.

சீனா அங்கு கனிம ஆராய்ச்சி, மீன்பிடி தொழில் ஆகியவற்றை நடத்தி வருகிறது. தென்சீனக் கடலில் இருந்து நெடுந்தூரத்திலிருக்கும் அமெரிக்கா சம்பந்தமே இல்லாமல் அங்கு பிரச்சனை செய்து அரசியல் லாபம் ஈட்ட முயல்கிறது என சீனா குற்றம்சாட்டியுள்ளது.

தற்போது இந்த விவகாரத்தில் அமெரிக்கா சார்பாக ஆசிய கடற்பரப்பு போக்குவரத்து அமைப்பின் தலைவர் கிரகரி பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் சீனா தொடர்ந்து தென் சீனக் கடல் விவகாரத்தில் அமெரிக்கா மீது குற்றம்சாட்டி வருவதைக் கண்டு பொறுத்திருக்க முடியாது. இதற்கு எங்கள் அமைப்பு சார்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளும் கடல் போக்குவரத்தில் பாதிக்கப்படுவதை மறுப்பதற்கில்லை. அமெரிக்கா தவிர பல ஆசிய நாடுகளில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து சீனாவின் இந்த அத்துமீறலால் பாதிக்கப்படுகிறது என அமெரிக்கா தரப்பில் கூறப்படுகிறது. 2016ஆம் ஆண்டு தென்சீனக் கடல் பரப்பு குறித்து போடப்பட்ட ஒப்பந்தத்தில் பிலிப்பைன்ஸ் தென்சீனக் கடலில் கடல் போக்குவரத்து மேற்கொள்ளலாம் என ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் அது தற்போது சீனாவில் மீறப்படுகிறது என பாம்பியோ குற்றம்சாட்டியுள்ளார்.

மூலக்கதை