ராஜஸ்தானில் காங்., அரசுக்கு ஆபத்து நீடிப்பு!

தினமலர்  தினமலர்
ராஜஸ்தானில் காங்., அரசுக்கு ஆபத்து நீடிப்பு!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள துணை முதல்வர் சச்சின் பைலட்டை சமாதானப்படுத்தும் முயற்சியை, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். ஆனாலும், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை புறக்கணித்து, சச்சின் பைலட் பிடிவாதமாக இருப்பதால், கெலாட் அரசுக்கு ஆபத்து நீடிக்கிறது. காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, 2018 டிசம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள, 200 தொகுதிகளில், காங்கிரஸ், 100 தொகுதிகளிலும், பா.ஜ., 72 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பெரும்பான்மைக்கு, 101 தொகுதிகள் தேவை என்ற நிலையில், கூட்டணி கட்சிகள், சுயேச்சைகள் உதவியுடன், 125 உறுப்பினர்கள் ஆதரவுடன், காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

முக்கிய தலைவரான சச்சின் பைலட், முதல்வர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால், மூத்த தலைவரான அசோக் கெலாட்டுக்கு முதல்வர் பதவியை, காங்., மேலிடம் கொடுத்தது. சச்சின் பைலட்டுக்கு துணை முதல்வர் பதவியை கொடுத்து சமாதானப்படுத்தியது.

கோரிக்கை:

இதற்கு பின் நடந்த இடைத்தேர்தல்களில் சில தொகுதிகளில், காங்கிரஸ் வெற்றி பெற்றது. சமீபகாலமாக, அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் அதிகரித்தது. எம்.எல்.ஏ.,க்களை வைத்து குதிரை பேரம் நடத்துவதாக, தனக்கு, ராஜஸ்தான் மாநில போலீசார், 'நோட்டீஸ்' வழங்கியதை எதிர்த்து, சச்சின் பைலட், போர்க்கொடி துாக்கினார்.சில நாட்களுக்கு முன், தன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் சிலருடன் ஜெய்ப்பூரிலிருந்து கிளம்பிய சச்சின் பைலட், டில்லியில் முகாமிட்டார்.

கெலாட் ஆட்சியை கவிழ்ப்பதற்காக, பா.ஜ., தலைவர்களுடன், அவர் பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியானதை அடுத்து, ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று ஜெய்ப்பூரில், காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து, கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று மதியம், முதல்வர் கெலாட்டின் இல்லத்தில், காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் துவங்கியது. இதில், 100 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

ஆனால், சச்சின் பைலட்டும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் இதில் பங்கேற்கவில்லை. டில்லியிலிருந்து வந்திருந்த, காங்., செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, அனைத்து, எம்.எல்.ஏ.,க்களும், கெலாட் அரசுக்கு ஆதரவு அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

அவர் கூறியதாவது: சச்சின் பைலட்டுடன் தொடர்ந்து பேச முயற்சித்தோம்; ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு குடும்பத்தில் உள்ளவர்களுக்குள் கருத்து வேறுபாடு வருவது இயற்கை தான். இந்த கருத்து வேறுபாடுகளை, குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து பேசி, சுமுகமாக தீர்க்க வேண்டும். சச்சின் பைலட், தன் பிரச்னையை கூற வேண்டும்; அதற்கு தீர்வு காணப்படும்.

சச்சின் பைலட்டிற்காக கதவு திறந்திருக்கிறது. அவர் எப்போது வேண்டுமானாலும் வந்து, தன் குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார். இதற்கிடையே, சச்சின் பைலட்டை சமாதானப்படுத்தும் முயற்சியை, காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பு:

ராகுல், பிரியங்கா, சிதம்பரம், அகமது படேல், வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள், சச்சின் பைலட்டுடன் போனில் பேசி, சமாதான முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. சச்சின் பைலட், இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் தலைவர்களிடம், அவர் என்ன பேசினார் என்ற விபரமும் தெரியவில்லை. இதற்கிடையே, 'எங்களிடம், 30 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். கெலாட் அரசு, பெரும்பான்மை இழந்துவிட்டது. டில்லியில், ராகுலை சந்தித்து பேசும் திட்டம் எதுவும் இல்லை' என, சச்சின் பைலட் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், முதல்வர்அசோக் கெலாட் வீட்டில் நடந்த, காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், நேற்று மாலை முடிவடைந்தது. இதில், 'அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம். சோனியா, ராகுல் ஆகியோரின் தலைமையில் தொடர்ந்து செயல்படுவோம்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பின், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் மற்றும் சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கெலாட் அரசுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த, 109 எம்.எல்.ஏ.,க்களிடம் கையெழுத்திட்ட கடிதம் பெறப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'சச்சின் பைலட்டிடம், 30 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதாக கூறுவது பொய். அவரிடம், 12 எம்.எல்.ஏ.,க்கள் தான் உள்ளனர். பா.ஜ.,வுடன் சேர்ந்து, என்ன திட்டம் தீட்டினாலும், அவரால் ஆட்சியை கவிழ்க்க முடியாது' என, காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. சச்சின் பைலட், பிடிவாதமாக இருப்பதால், ராஜஸ்தானில், கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து நீடிக்கிறது.

சச்சின் பைலட் திட்டம் என்ன?

மேலிடம், தனக்கு முதல்வர் பதவி கொடுக்காததால், அசோக் கெலாட் தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்கு, தொடர்ந்து முயற்சித்து வருகிறார், சச்சின் பைலட். மார்ச்சிலிருந்து, பா.ஜ., தலைவர்களுடன், இது குறித்து ரகசியமாக பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தனக்கு, 30 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாக கூறி, காய் நகர்த்தி வருகிறார்.

பா.ஜ.,வில் இணைவது, அவரது திட்டமல்ல. அதற்குப் பதிலாக, பா.ஜ., ஆதரவுடன் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்பதே, அவரது திட்டம். ஆனால் இதற்கு, பா.ஜ., தலைவர்கள் தயங்கி வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து, பா.ஜ., தலைவர்களுடன், அவர் பேச்சு நடத்தி வருகிறார். இதற்காக டில்லியில், தன் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து முகாமிட்டுள்ளார். 'பா.ஜ.,வில் இணைய சம்மதித்தால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பேசலாம்'என, பா.ஜ., தலைவர்கள் தரப்பில், சச்சின் பைலட்டிடம் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வருமான வரித்துறை சோதனை:

மையமாக வைத்து செயல்படும், நீர் மின் திட்ட நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அந்த நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அலுவலகங்கள் உள்ள டில்லி, மும்பை, ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில், இந்த சோதனை நடந்தது. இதில், 80க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர். இது தவிர, ஜெய்ப்பூரில் நகை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒரு நபருக்குச் சொந்தமான இடத்திலும் சோதனை நடந்தது.

காங்கிரசார் கூறுகையில், 'ராஜஸ்தானில், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்காக வருமான வரித் துறையை, மத்திய அரசு களத்தில் இறக்கி விட்டுள்ளது. காங்கிரஸ் பிரமுகர்களுக்கு நெருக்கமானவர்களது வீடுகளில் சோதனை நடத்தி, அவர்களை அச்சுறுத்த நினைக்கின்றனர்' என்றனர். பரூக் அப்துல்லாவின் மருமகன் சச்சின் பைலட்

யார் இந்த சச்சின் பைலட்?

காங்கிரசின் மறைந்த முக்கியதலைவர்களில் ஒருவரான ராஜேஷ் பைலட்டின் மகன் தான், இந்த சச்சின் பைலட், 42. டில்லி, செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லுாரியில் படித்தவர். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலையில், எம்.பி.ஏ., பட்டப்படிப்பை முடித்தவர்.

பி.பி.சி., நிறுவனத்திலும், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திலும் சிறிது காலம் பணியாற்றிய அவர், 26 வயதிலேயே, அரசியலுக்குள் வந்தார். 2012ல், மன்மோகன் சிங் அமைச்சரவையில், கார்ப்பரேட் துறைக்கான அமைச்சராகவும் பணியாற்றினார்.மத்தியில் ஆட்சியை இழந்து காங்கிரசின் செல்வாக்கு குன்றியதால், 2018ல், ராஜஸ்தான் மாநில அரசியலுக்கு திரும்பி, மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக விளங்கினார்.

முதல்வர் பதவியை எதிர்பார்த்தும் கிடைக்காமல் போகவே, துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார். ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில், துணை முதல்வரான தன்னிடம் உள்ள மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை பறிக்க, அசோக் கெலாட் போடும் திட்டமே, பிரச்னைக்கு அடிப்படை காரணம் என, அவர் கூறி வருகிறார். சோனியா குடும்பத்திற்கு நெருக்கமாகவும், ராகுலின் உள்வளைய வட்டத்திற்குள் இருக்கும் மிக முக்கிய இளம் தலைவர்களில் ஒருவருமான, இந்த சச்சின் பைலட், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான, பரூக் அப்துல்லாவின் மகளான சாரா அப்துல்லாவை மணம் முடித்துள்ளார்.

தன் தந்தை ராஜேஷ் பைலட்டைப் போலவே, விமானம் ஓட்டுவதிலும், சினிமா பார்ப்பதிலும் தீவிர விருப்பம் கொண்டிருந்தாலும், ராணுவத்தின் அங்கமான, 'டெரிடோரியல் ஆர்மி'யில், தற்காலிக கவுரவ அதிகாரி எனப்படும் பதவியில், முதன் முதலில் அமர்ந்த அமைச்சர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- நமது டில்லி நிருபர் -

மூலக்கதை