பிரான்ஸ் பனிச்சிகரத்தில் கிடைத்த பழைய இந்திய செய்தித்தாள்கள்

தினமலர்  தினமலர்
பிரான்ஸ் பனிச்சிகரத்தில் கிடைத்த பழைய இந்திய செய்தித்தாள்கள்

பாரீஸ்: பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள மாண்ட் பிளாங்கில் உருகும் பனிச்சிகரத்தில் இருந்து, 54 ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய செய்தித்தாள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1966ம் ஆண்டு ஜன. 24ல் டில்லியில் இருந்து லண்டனுக்கு சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 707 விமானம், ஐரோப்பாவின் உயர்ந்த மலைச்சிகரமான ஆல்ப்ஸ் மலைத்தொடர் அருகே பறந்த போது தகவல் தொடர்பு மையத்துடனான கட்டுப்பாட்டை இழந்து பனிப்பாறைகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானி உள்பட 177 பேரும் உயிரிழந்தனர்.

அந்த இடத்தில் இருந்து நேஷனல் ஹெரால்டு, எகனாமிக் டைம்ஸ் உள்பட 12க்கும் மேற்பட்ட செய்திதாள்கள் கிடைத்துள்ளன. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் அப்போதைய 1966ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திரா தேர்வு செய்யப்பட்ட செய்தி தற்போதும் படிக்கும் வகையில் உள்ளது. சுமார் 1,350 அடி உயரத்தில் உள்ள மாண்ட் பிளாங் சிகரத்தில் கஃபே வைத்துள்ள பிரான்சை சேர்ந்த திமோத்தே மோட்டின், செய்தித்தாள் உள்ளிட்ட ஆவணங்களை கண்டெடுத்து பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக சேகரித்து வைக்கிறார்.

இது குறித்து திமோத்தே மோட்டின் கூறுகையில், 'இப்போது பத்திரிகை காகிதம் உலர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவை மிகவும் நல்ல நிலையில் உள்ளன. நீங்கள் அவற்றைப் படிக்கலாம். இது அசாதாரணமானது அல்ல. ஒவ்வொரு முறையும் நாங்கள் நண்பர்களுடன் பனிப்பாறைகளில் நடக்கும் போது விபத்தின் எச்சங்களை காண்போம். அனுபவம் இருப்பின் அவை எங்கே இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியும். அவற்றின் அளவை பொறுத்து பனிப்பாறையுடன் அடித்து செல்லப்படுகின்றன. ஏறக்குறைய ஆறுபது ஆண்டுகளாக அவற்றை மூடியிருந்த பனி உருகிவிட்டதால், காகிதங்களைக் கண்டுபிடிக்க முடிந்தது என்னுடைய அதிர்ஷ்டம்' என்கிறார்.

கடந்த 2012 முதல் பனி உருகுவதால், 1966ம் ஆண்டு விமான விபத்து தொடர்பான பொருட்கள் கிடைத்து வருகின்றன. 2012ம் ஆண்டில், 'இந்திய அரசு சேவையில், ராஜதந்திர அஞ்சல், வெளிவிவகார அமைச்சகம்' என்று முத்திரையிடப்பட்ட ராஜதந்திர அஞ்சல்' ஒரு பை மீட்கப்பட்டது, அதே நேரத்தில் ஒரு வருடம் கழித்து ஒரு பிரெஞ்சு மலையேற்ற நிபுணரான எமரால்ட்ஸ், சபையர் மற்றும் மாணிக்கங்கள் அடங்கிய ஏர் இந்தியா லோகோவைக் கொண்ட உலோகப் பெட்டியைக் கண்டுபிடித்தார். 2017ல் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் 1966 விபத்தில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது அல்லது 1950ல் இதே பகுதியில் விபத்தில் சிக்கிய மலபார் பிரின்சஸ் விமானத்தில் பயணித்தவர்களாக இருக்கலாமென கூறப்படுகிறது.

மூலக்கதை