கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் நடக்கப்போவது என்ன?

தினமலர்  தினமலர்
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் நடக்கப்போவது என்ன?

வாஷிங்டன்: உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பலநாடுகள் சோதனை நடத்தி வருகின்றன. ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் தடுப்பு மருந்து சோதனையில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் முதலில் அதனை பணக்கார நாடுகளை வாங்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை தவிர்த்து ஏழை நாடுகள் தடுப்பு மருந்தை வாங்க நிதி இல்லாமல் தவிக்கும் நிலை உருவாகும் எனக் கூறப்படுகிறது. இதன் பின்னால் மிகப்பெரிய வர்த்தகம் நடக்கும். பெரிய நிறுவனங்கள் இந்த வர்த்தகத்தில் கலந்துகொள்ளும். இதனால் ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட சிறு நாடுகள் தடுப்பு மருந்தை வாங்க வசதி இல்லாமல் சிரமப்படும் நிலை 2021ம் ஆண்டு ஏற்படும் என கணிக்கப்படுகிறது. ஆனால் இதனை உறுதியாக கூற முடியாது.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் உலகில் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவே அதனை எந்த விலை கொடுத்தாவது வாங்க முற்படும் என்பதில் சந்தேகமில்லை. இதனை அடுத்து சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த வரிசையில் நிற்கும்.

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முதல்தர தடுப்பு மருந்து அதிக அளவில் தயாரிக்கப்படும். முதலில் வளர்ந்த நாடுகளின் தேவை பூர்த்தியான பின்னரே மற்ற நாடுகளுக்கு இவை விற்கப்படும். எந்த நாடு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கிறதோ அந்த நாடு, அதன் நட்பு நாடுகளுக்கும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கும் முன்னுரிமை அளிக்கும்.

இது அந்த நாட்டின் தனிப்பட்ட வர்த்தக சுதந்திரம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் இதில் ஐநா, உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பொது அமைப்புகள் தலையிட்டு அனைத்து நாடுகளுக்கும் தடுப்பு மருந்து வழங்க வலியுறுத்த வேண்டும். ஆனால் இது சாத்தியமா என்பது கேள்விக்குறிதான். துவக்கத்தில் தடுப்பு மருந்தின் விலை கண்டிப்பாக அதிகமாகவே இருக்கும். படிப்படியாக குறையும். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நாடு கூறும் விலைக்கு அனைத்து நாடுகளும் விலைகொடுத்து வாங்குவது என்பது இயலாத காரியம்.

ஆனால் கட்டாயமாக தடுப்பு மருந்து பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே மருத்துவ விஞ்ஞானிகளின் நோக்கமாக உள்ளது. சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இதற்கு ஏற்கனவே தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டன, அவை தேவை அதிகரிக்கும்போது தடுப்பு மருந்தை வெளியிடும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

2021 ஏப்ரலில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சமீபத்தில் அமெரிக்க நோய்தடுப்பு நிபுணர் ஆண்டனி பவுஸி இதுகுறித்துப் பேட்டி அளித்திருந்தார். இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தடுப்பு மருந்தை மனிதர்களிடம் சோதனை செய்து பார்க்க உள்ளது.

இதேபோல பல நாடுகளில் மூன்றாம் கட்ட தடுப்பு மருந்து சோதனை செய்ய தனியார் நிறுவனங்கள் அனுமதி பெற்றுவிட்டன. சோதனை முடிந்த உடன் அந்த நிறுவனங்கள் உலகுக்கு அதன் முடிவுகளை அறிவிக்க வேண்டுமே தவிர ரகசியம் காக்க கூடாது என்று ஓர் ஒப்பந்தத்தை இடுவது நல்லது. அப்போதுதான் மனிதகுலத்தை கொரோனாவில் இருந்து காக்க முடியும். இதில் நட்பு நாடு, எதிரி நாடு என பாரபட்சம் காட்டக்கூடாது என்பதே நடுநிலையாளர்களின் கருத்து.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் ஒரு நாட்டில் உள்ள குடிமக்களில் யார் யாருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று. பொதுவாக நாள்பட்ட நோய்த் தாக்கப்பட்ட 50 வயதிற்கு மேற்பட்டவர்களில் அதிகம் பாதித்து மரணத்தை ஏற்படுத்துகிறது கொரோனா. எனவே வயோதிகர்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து அவர்களைக் காக்கவேண்டும். இதையே அமெரிக்காவின் பில் கேட்ஸ் பவுண்டேஷன் வலியுறுத்துகிறது. இதேபோல உலக செல்வந்தர்கள் பலரது தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கருத்து தெரிவித்துள்ளன.

மூலக்கதை